கலெக்டர் நடராஜன் அறிவிப்பு தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தது; குறைதீர்க்கும் கூட்டங்கள் ரத்து
மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால் குறைதீர்க்கும் கூட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றது என்று கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை,
மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பொது மற்றும் தனியார் சுவர்களில் செய்த விளம்பரங்கள் அழிக்கப்படும். கட்சி பிரமுகர்களின் படங்கள் அகற்றப்படும். தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நடைமுறைகள் உடனடியாக பின்பற்றப்படும். அனுமதியின்றி சினிமா, தொலைகாட்சி, ரேடியோ போன்றவற்றில் எந்த வித விளம்பரங்களும் செய்யக்கூடாது. வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. அனுமதியின்றி ஒலிபெருக்கிகள் அமைக்கக்கூடாது.
மதுரை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் சுமுகமாகவும், எந்தவித புகார்களும் இன்றியும் நடத்திட அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டம், மாதந்தோறும் நடைபெறும் சிறப்பு மனுநீதி நாள் முகாம் மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் போன்றவை நடைபெறாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கலெக்டரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) நடைபெற இருந்த குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக அரசு விருந்தினர் மாளிகையில் அமைச்சர்கள் தங்குவதும், அவர்கள் அரசு காரில் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் தங்களது அலுவலகத்தை திறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.