தேர்தல் ஆதாயத்துக்காக பா.ஜனதா பாதுகாப்பு துறையை தவறாக பயன்படுத்துகிறது ராஜ் தாக்கரே குற்றச்சாட்டு


தேர்தல் ஆதாயத்துக்காக பா.ஜனதா பாதுகாப்பு துறையை தவறாக பயன்படுத்துகிறது ராஜ் தாக்கரே குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 March 2019 4:30 AM IST (Updated: 11 March 2019 4:11 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் ஆதாயத்துக்காக பாதுகாப்பு துறையை பா.ஜனதா தவறாக பயன்படுத்துவதாக ராஜ் தாக்கரே குற்றம் சாட்டி உள்ளார்.

மும்பை,

தேர்தல் ஆதாயத்துக்காக பாதுகாப்பு துறையை பா.ஜனதா தவறாக பயன்படுத்துவதாக ராஜ் தாக்கரே குற்றம் சாட்டி உள்ளார்.

மீண்டும் ஒரு தாக்குதல்

மராட்டிய நவநிா்மாண் சேனா கட்சியின் 13-வது ஆண்டு விழா நிகழ்ச்சி, மும்பை பாந்திராவில் உள்ள ரங்குசாரதா அரங்கில் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கலந்துகொண்டு பேசியதாவது:-

சமீபத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் நடத்திய வான்வெளி தாக்குதல் குறித்து மத்திய அரசு பொய் கூறி வருகிறது. இந்த தாக்குதல் குறித்து கூறி தேர்தலில் வெற்றி பெற அவர்கள் விரும்புகின்றனர்.

எனது வார்த்தையை குறித்து வைத்து கொள்ளுங்கள். தேர்தலுக்கு முன் புலவாமா தாக்குதல் போன்ற மற்றொரு சம்பவம் நாட்டில் நடக்கும். அதன்பிறகு அவர்கள் தேசப்பற்று குறித்து பேசத்தொடங்குவார்கள். பா.ஜனதா கூறிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. எனவே அவர்களுக்கு தேசப்பற்றை பேசி வாக்குகளை சேகரிப்பதை தவிர வேறு வழியில்லை.

தேர்தல் ஆதாயம்

நமது விமானப்படையினர் அவர்களுக்கு கொடுத்த இலக்கை சரியாக தாக்கி அழித்தனர். ஆனால் அந்த தாக்குதல் குறித்து தவறான தகவல்களை அரசு அவர்களுக்கு வழங்கி உள்ளது. இந்தியா நடத்திய வான்வெளி தாக்குதலில் பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் பலியானதாக அமித்ஷா கூறுகிறார்.

அவர் விமானப்படையினர் சென்ற போர் விமானத்தின் சகவிமானியாக சென்றாரா?. பாகிஸ்தானில் நடத்திய தாக்குதலில் 10 பேர் பலியாகி இருந்தால் கூட, அவர்கள் விமானப்படை விமானி கள் அபிநந்தனை திருப்பி அனுப்பி இருக்க மாட்டார்கள். தேர்தல் ஆதாயத்துக்காக பாதுகாப்பு துறையை பா.ஜனதா பயன்படுத்துகிறது.

தேசப்பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் பாகிஸ்தானை சேர்ந்தவருடன் சேர்ந்து தொழில் செய்கிறார். இது தேசத்துரோகம் இல்லையா?. அஜித் தோவல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந் தேதி பாகிஸ்தான் அதிகாரிகளை ரகசியமாக சந்தித்து பேசி உள்ளார். அதன்பிறகு தான் புலவாமா தாக்குதல் நடந்து உள்ளது. அஜித் தோவல் எதற்காக பாகிஸ்தான் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

தொண்டர்கள் ஏமாற்றம்

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்களை தேசத்துரோகிகளாக பா.ஜனதாவினர் சித்தரிக்கின்றனர். தேச பக்தியை எங்களுக்கு கற்றுத்தர பா.ஜனதாவினர் யார்?. பா.ஜனதாவினர் சமூக வலைத்தளங்களில் நமக்கு எதிராக அவதூறு பரப்பினால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்த தனது நிலைப்பாட்டை ராஜ் தாக்கரே அறிவிப்பார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் குறித்து அவர் எதுவும் அறிவிக்காதது தொண்டர்கள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story