மும்பை - புனே நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதியதில் பெண்கள் உள்பட 4 பேர் பலி


மும்பை - புனே நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதியதில் பெண்கள் உள்பட 4 பேர் பலி
x
தினத்தந்தி 11 March 2019 5:00 AM IST (Updated: 11 March 2019 4:16 AM IST)
t-max-icont-min-icon

மும்பை - புனே நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேர் பலியானார்கள்.

மும்பை,

மும்பை - புனே நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேர் பலியானார்கள்.

லாரி மீது மோதியது

புனேயில் இருந்து மும்பை நோக்கி நேற்று முன்தினம் மதியம் வாடகை கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. காரில் 4 பெண்கள் உள்பட 5 பயணிகள் இருந்தனர். காரை டிரைவர் பிரதிக் ஜாதவ் (வயது26) என்பவர் ஓட்டினார்.

கார் மதியம் 2.30 மணியளவில் மும்பை - புனே நெடுஞ்சாலையில் கண்டாலா அருகே, பார் காட் பகுதியில் உள்ள உணவு வளாகம் அருகே வந்து கொண்டு இருந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்று கொண்டு இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் மோதிய வேகத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. மேலும் காரில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.

4 பேர் பலி

தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் காரில் படுகாயங்களுடன் கிடந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் அகமதுநகரை சேர்ந்த கல்லூரி மாணவர் சுஷ்மித் முத்தா (22) மற்றும் அம்பர்நாத்தை சேர்ந்த ஜானகி நானேகர் (27), மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராணி கவுர் (25), குஜராத்தை சேர்ந்த மோக்சா ஷா (33) ஆகிய 3 பெண்கள் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர்.

மேலும் காயமடைந்த கார் டிரைவர் பிரதீக் ஜாதவ், புனேயை சேர்ந்த பிரீத்தி ராமி (35) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீஸ்காரர் ஒருவர் கூறும்போது, டிரைவர் தூங்கியதால் விபத்து நடந்ததாக கூறினார்.

விபத்து குறித்து போலீசார் கார் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story