கடலூர் அருகே, கண்டக்டர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் நகை திருட்டு - வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை


கடலூர் அருகே, கண்டக்டர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் நகை திருட்டு - வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 March 2019 9:45 PM GMT (Updated: 10 March 2019 11:01 PM GMT)

கடலூர் அருகே கண்டக்டர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் நகை, வெள்ளிப்பொருட்கள் திருடுபோனது. இது தொடர்பாக வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்,

கடலூர் அருகே உள்ள குறவன்பாளையத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவர் கடலூர் அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவர் வேலைக்கு சென்று விட்டார். மனைவி தாட்சாயிணி (வயது 38) மட்டும் வீட்டில் இருந்தார். அவர் மதியம் வீட்டை பூட்டி விட்டு பக்கத்து தெருவுக்கு சென்றிருந்தார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டின் பின்பக்க கதவு பூட்டை உடைத்து விட்டு உள்ளே புகுந்தார். பின்னர் அங்கிருந்த மேஜையில் இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து, அதில் இருந்த 5 பவுன் செயின் மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்றார். இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

இதை அறியாத தாட்சாயிணி சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, நகை, வெள்ளிப்பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது.

இது பற்றி தாட்சாயிணி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story