அடையாறு, திருவான்மியூரில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது


அடையாறு, திருவான்மியூரில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 12 March 2019 3:45 AM IST (Updated: 11 March 2019 10:38 PM IST)
t-max-icont-min-icon

சென்னை பெசன்ட்நகர், அடையாறு, திருவான்மியூர் சுற்றுவட்டார பகுதிகளில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து திருடிய 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

அடையாறு,

சென்னை பெசன்ட்நகர், அடையாறு, திருவான்மியூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுவதாக அடிக்கடி புகார்கள் வந்தன. இதையடுத்து அடையாறு உதவி கமிஷனர் வினோத் சாந்தாராம் உத்தரவின்பேரில் சாஸ்திரி நகர், அடையாறு இன்ஸ்பெக்டர்கள் பலவேசம், மனோகர் மற்றும் மாலினி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் சாஸ்திரி நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தும்படி சைகை செய்தனர்.

ஆனால் போலீசை கண்டதும் அவர்கள் மோட்டார்சைக்கிளை திருப்பிக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், 3 பேரையும் விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர்.

பிடிபட்ட 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், பெசன்ட் நகரைச் சேர்ந்த ராஜீ (வயது 20) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மற்றும் 15 வயதான சிறுவர்கள் 2 பேர் என்பது தெரியவந்தது.

இவர்கள் 3 பேரும் சேர்ந்து சாஸ்திரி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே நின்றிருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு வந்தபோது போலீசாரிடம் பிடிபட்டதும் தெரிந்தது.

மேலும் இவர்கள் 3 பேரும் சேர்ந்து சாஸ்திரி நகர், அடையாறு, திருவான்மியூர், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து திருடியதும் தெரிந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

கைதான ராஜீ, மோட்டார் சைக்கிள் மெக்கானிக் ஆவார். அவர், அந்த 2 சிறுவர்களுடன் சேர்ந்து அதிகாலை நேரங்களில் தனியாக நிற்கும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை நோட்டமிட்டு, அதன் பக்கவாட்டில் உள்ள லாக்கை உடைத்து வயர்களை இணைத்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்று உல்லாச சவாரி செய்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இவர்கள் இதுபோன்று வேறு ஏதாவது குற்றச் செயல் களில் ஈடுபட்டு உள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார்சைக்கிள் திருடர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை, அடையாறு துணை கமிஷனர் ஷெசாய் சாய் பாராட்டினர்.

Next Story