நீலகிரி மாவட்டத்தில், தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 18 பறக்கும் படைகள் அமைப்பு
நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஊட்டி,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் ஊட்டி, குன்னூர், கூடலூர்(தனி), மேட்டுப்பாளையம், அவினாசி(தனி), பவானிசாகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. வேட்புமனு தாக்கல் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நீலகிரி நாடாளுமன்ற தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான இன்னசென்ட் திவ்யாவிடம் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தன. நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 வீதம் மொத்தம் 18 பறக்கும் படைகள், 18 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 10 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு தாசில்தார், துணை தாசில்தார் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் தலைமையில் 9 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் குறித்த விவரங்களை பெறவும், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா? என்பதை சரிபார்க்கவும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். தேர்தல் தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம். புகார் தெரிவித்து குறிப்பிட்ட சில மணி நேரங்களில் பறக்கும் படையினர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று விசாரணை நடத்துவார்கள். தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட 18004250034 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் புகார்கள் தெரிவிக்கலாம்.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். எனவே பணம் கொடுப்பவர்கள் மீது புகார் கிடைத்தால், சம்பந்தப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, ஓராண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். பரிசு பொருட்கள் கொடுப்பது, மதுபானங்களை வழங்குவது, துப்பாக்கிகள் வைத்திருப்பது போன்றவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி சாலைகளில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. கூட்டம் நடத்தக்கூடாது. நோட்டீஸ் அடித்தால் தேர்தல் அதிகாரி வழங்கிய அனுமதி எண் குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். பிளக்ஸ் பேனர்கள் சாலையோரம் மற்றும் நடைபாதைகளில் வைக்கக்கூடாது.
வேட்பாளர்கள், ஏஜெண்டுகள், அரசியல் கட்சி தலைவர்கள் பயன்படுத்தும் வாகனத்துக்கு அனுமதி கடிதம் பெற்றிருக்க வேண்டும். அந்த கடிதம் தெரியும் வகையில் வாகனத்தில் ஒட்டப்பட வேண்டும். அரசுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டு உள்ள கொடி கம்பங்களை அகற்ற வேண்டும். கல்வெட்டுகள் இருந்தால் மூட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேல் மற்றும் ரவிக்குமார்(தி.மு.க.), பீமராஜ்(காங்கிரஸ்), சந்திரன்(பா.ஜனதா), பெள்ளி(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர். முன்னதாக வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் வி.வி.பாட் எந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டது. அப்போது வெளியில் நின்றவாறே அரசியல் கட்சியினர் வாக்கு எந்திரங்களை பார்த்தனர். இதையடுத்து பறக்கும் படையில் இடம்பெற்ற போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story