பொள்ளாச்சியில் மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டல், கைதான 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டருக்கு பரிந்துரை - போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
பொள்ளாச்சியில் மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் கைதான 4 பேரையும், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் கூறினார். கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை,
பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவியிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் பேரில் 24-ந் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 25-ந் தேதி சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு கடந்த 5-ந் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் புகார் அளித்த மாணவியின் அண்ணனை மிரட்டிய செந்தில், ஆச்சிபட்டி வசந்தகுமார், நாகராஜ், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் வேறு நபர்களுக்கோ, அரசியல் கட்சியினருக்கோ தொடர்பு இல்லை. இது சம்பந்தமாக தவறான தகவல் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவியை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மேலும் மாணவியின் அண்ணனை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட நாகராஜ், பொள்ளாச்சி 34-வது வார்டு ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்துள்ளார். அவருக்கு ஆபாச வீடியோ தொடர்பான வழக்கில் தொடர்பு இல்லை. புகார் அளித்த பெண்ணின் சகோதரரை மிரட்டிய வழக்கு மட்டுமே உள்ளது. மேலும் இந்த வழக்கில் சிலர், விரைவாக ஜாமீனில் வெளியே வந்து உள்ளனர். அவர்களின் ஜாமீனை ரத்து செய்வது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கைது செய்யப்பட்டவர்கள் மீது 7 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கும் வகையில், பெண்கள் மீதான வன்கொடுமை, மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்டோரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. மேலும் பேஸ்புக்கில் (முகநூல்) வெளியிடப்பட்ட வீடியோவில் திருநாவுக்கரசு கூறியதை உண்மை என்று கருத முடியாது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதில் 4 வீடியோக்கள் மட்டுமே உள்ளன. அதில் திருநாவுக்கரசு செல்போனில் மட்டும் 3 வீடியோக்கள் இருந்தன. இந்த வீடியோக்களை வைத்து சம்பந்தப்பட்ட பெண்களிடம் அவர்கள் ஆயிரக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.
மேலும் வீடியோக்களில் 4 பெண்கள் துன்புறுத்தப்படுவது குறித்த காட்சிகள் பதிவாகி உள்ளன. இதில் 2 பெண்கள் யார் என்பதை கண்டறிந்து உள்ளோம். மீதம் உள்ள 2 பெண்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் வெளிமாவட்டத்தை சேர்ந்த பெண்களாக இருக்கலாம். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் வீடியோக்கள் எதுவும் அழிக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் இவர்கள் சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இருந்ததாக கூறப்படுவது தவறான தகவல்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம். அவர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் ரகசியம் காக்கப்படும். பெண்களை மிரட்டியது தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரை தவிர வேறு யாருக்கும் தொடர்பு இல்லை. தொடர்ந்து புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் யாருக்காவது தொடர்பு இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இவர்கள் மீது பாலியல் பலாத்கார பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வில்லை. அதுபோன்று சம்பந்தப்பட்ட பெண்கள் யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை. சமூக வலைத்தலங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோ பரவி வருகிறது. இதனை தடுக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
திருநாவுக்கரசு கல்லூரியில் படிக்கும் போது ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அந்த பெண் தான் திருநாவுக்கரசு பிற பெண்களுடன் பழகுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து உள்ளார். மேலும் அவர் தலைமறைவாக இருந்த போது அந்த பெண் தான் உதவி செய்துள்ளார். இந்த வழக்கில் தேவைப்பட்டால் விசாரணை அதிகாரியாக பெண் அதிகாரி ஒருவர் நியமனம் செய்யப்படுவார்.
பொள்ளாச்சி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட பெண்களின் விபரங்கள் சேகரிக்கப்படும். இதில் அந்த பெண்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் குறித்து விசாரிக்கப்படும். பொள்ளாச்சியில் போலீஸ்நிலையத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் யாராவது செயல்பட்டால், அது குறித்து விசாரணை நடத்தி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொள்ளாச்சியில் இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்த அனுமதி கேட்டால் பரிசீலனை செய்து அனுமதி வழங்கப்படும்.
பெண்கள் சமூக வலைத்தலங்களில் தங்களைப்பற்றி தனிப்பட்ட படங்கள், விபரங்களை பதிவு செய்ய வேண்டாம். மேலும் முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டால் அவர்களிடம் பேச வேண்டாம். சமூக வலைத்தலங்களை எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும். மகளிர் போலீஸ் நிலையங்கள் மூலமாக பள்ளி, கல்லூரி மாணவிகள், பணிபுரியும் பெண்கள் ஆகியோருக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேட்டியின் போது கூறினார்.
Related Tags :
Next Story