பொதுத்தேர்வுக்கு ஹால்டிக்கெட் வழங்காத ஆசிரியர்களை கண்டித்து மாணவ-மாணவிகள் சாலை மறியல்


பொதுத்தேர்வுக்கு ஹால்டிக்கெட் வழங்காத ஆசிரியர்களை கண்டித்து மாணவ-மாணவிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 March 2019 4:30 AM IST (Updated: 12 March 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

பொதுத்தேர்வுக்கு ஹால் டிக்கெட் வழங்காத ஆசிரியர்களை கண்டித்து நாகூரில் மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை மாணவ-மாணவிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகூர்,

நாகையை அடுத்த நாகூரில் பிடாரி அம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள அரசு உதவி பெறும் தேசிய மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது இந்த பள்ளியில் பிளஸ் -1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. 2 தினங்களுக்கு முன்பு பள்ளியின் தலைமையாசிரியர் குழந்தைவேலு மற்றும் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளிடம் ஹால் டிக்கெட்டுக்கு (நுழைவு சீட்டுக்கு) ஆயிரம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் ஹால் டிக்கெட் வழங்கும்படி ஆசிரியர்களிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் பணம் கட்டவில்லை என்றால் ஹால் டிக்கெட் வழங்கப்படாது என்று கூறினர். இதனால் ஆத்திரமடைந்த 20 மாணவிகள் உள்பட 50 மாணவர்கள் நாகூர்-நாகை மெயின் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து மீண்டும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதா சம்பவ இடத்துக்கு வந்த போது, மாணவ, மாணவிகள் அவரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவ-மாணவிகள் மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்திற்கு வர வேண்டும் என்று கூறினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதா சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் நாகூர்-நாகை மெயின் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story