மத்திய அரசுக்கு விவசாயிகள் நலனில் அக்கறை இல்லை பிருந்தாகாரத் பேச்சு


மத்திய அரசுக்கு விவசாயிகள் நலனில் அக்கறை இல்லை பிருந்தாகாரத் பேச்சு
x
தினத்தந்தி 12 March 2019 4:30 AM IST (Updated: 12 March 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசுக்கு விவசாயிகள் நலனில் அக்கறை இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார்.

நாகப்பட்டினம்,

நாகை அவுரித்திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நாகை மாலி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர்கள் நாகராஜன், முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் வரவேற்றார். இதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயலின் தாக்கத்தின் போது மத்திய அரசின் முழு நிவாரணம் கிடைக்காததால் நாகை மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு விவசாயிகளின் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனில் அக்கறை செலுத்தி வருகிறது. டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து விட்டு, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

பா.ஜ.க. ஆட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தீவிர களப்பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் முத்துப்பெருமாள், சீனிவாசன், ஸ்டாலின், துரைராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நாகை நகர செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார். 

Next Story