தேர்தல் விதிமுறையை மீறி பணம், பொருட்களை எடுத்துச்செல்வதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை


தேர்தல் விதிமுறையை மீறி பணம், பொருட்களை எடுத்துச்செல்வதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 12 March 2019 4:45 AM IST (Updated: 12 March 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் விதிமுறையை மீறி விழுப்புரம் மாவட்டத்தில் பணம், பொருட்களை எடுத்துச்செல்வதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்,

17-வது நாடாளுமன்ற தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.

தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணமோ அல்லது பரிசுப்பொருட்களோ கொடுத்து வாக்குகளை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்காக அவற்றை வாகனங்களில் எடுத்துச்செல்வார்கள்.

இதனை கண்காணித்து தடுக்க மாவட்டந்தோறும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களில் ஒரு அரசு அலுவலர், ஒரு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 ஏட்டுகள் என 6 பேர் பணியில் இருப்பார்கள். இந்த குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் இருந்து முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் 33 பறக்கும் படை குழுக்களும், 33 நிலையான கண்காணிப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் நேற்று முதல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குழுவினர் இருசக்கர வாகனம், கார், ஆட்டோ, வேன், லாரி, சரக்கு வாகனம், மினி லாரி, தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள் என அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

Next Story