தாறுமாறாக ஓடிய லாரி 5 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது, குடிபோதையில் இருந்த டிரைவருக்கு பொதுமக்கள் தர்மஅடி


தாறுமாறாக ஓடிய லாரி 5 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது, குடிபோதையில் இருந்த டிரைவருக்கு பொதுமக்கள் தர்மஅடி
x
தினத்தந்தி 12 March 2019 3:09 AM IST (Updated: 12 March 2019 3:09 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் தாறுமாறாக ஓடிய லாரி 5 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. குடிபோதையில் இருந்த லாரி டிரைவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு சம்பத்நகர் நசியனூர் ரோட்டில் நேற்று மாலை லாரி ஒன்று சென்றுகொண்டு இருந்தது. அந்த லாரி திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனால் சாலையோரமாக நடந்து சென்றவர்கள் அலறி அடித்து ஓடினார்கள். அதன்பின்னர் சாலையோரமாக நின்றிருந்த 5 மோட்டார் சைக்கிள்கள் மீது லாரி மோதியது. மேலும், லாரி நிற்காமல் மெதுவாக சென்றுகொண்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக மோட்டார் சைக்கிள்களில் விரட்டி சென்று லாரியை மடக்கி நிறுத்தினார்கள். இதையடுத்து லாரியில் இருந்து இறங்கிய டிரைவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த டிரைவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அந்த டிரைவர் ஈரோடு வீரப்பன்சத்திரம் ஆண்டவர் வீதியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 42) என்பது தெரியவந்தது. மேலும், அவர் குடிபோதையில் இருந்ததை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து ஜெயக்குமாரை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அவர் மீது குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story