தேர்தல் நடத்தை விதிகள் அமல்: அரசியல் கட்சி விளம்பரங்கள் அழிப்பு கலெக்டர் சிவராசு நேரில் ஆய்வு


தேர்தல் நடத்தை விதிகள் அமல்: அரசியல் கட்சி விளம்பரங்கள் அழிப்பு கலெக்டர் சிவராசு நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 12 March 2019 4:30 AM IST (Updated: 12 March 2019 3:20 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அரசியல் கட்சியினரால் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. இதனை கலெக்டர் சிவராசு நேரில் ஆய்வு செய்தார்.

திருச்சி,

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. வருகிற 19-ந் தேதி முதல் மனு தாக்கல் தொடங்குகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி, உடனடியாக நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. திங்கட்கிழமை தோறும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிந்து புதிய அரசு மத்தியில் பொறுப்பேற்கும் வரை இந்த நடைமுறை அமலில் இருக் கும்.

மேலும் புதிய வளர்ச்சித்திட்டங்கள், நலத்திட்டங்களுக்கும் அனுமதி கிடையாது. அதே வேளையில், ஏற்கனவே அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் எவ்வித தடையும் இல்லை. தேர்தல் தொடர்பான புகார்கள் வந்தால், நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், சம்பந்தப்பட்ட இடத்திற்கு வீடியோகிராபர் ஒருவருடன் சென்று விசாரித்து அதை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள்.

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே அரசு சுவர்கள், கட்டிடங்கள், பாலங்கள், பாலங்களை தாங்கி நிற்கும் தூண்கள் ஆகியவற்றில் அரசியல் கட்சியினர் சுவரொட்டிகள் ஒட்டியும், பெயிண்டால் எழுதியும் முன்கூட்டியே இடத்தை ‘ரிசர்வ்’ செய்து வைத்திருந்தனர். வேட்பாளர் களின் பெயர் அறிவிக்கும் முன்னரே திருச்சியில் மக்கள்நீதி மய்யம் மற்றும் நாம்தமிழர் கட்சியினர் வாக்கு களை சேகரிக்கும் விதமாக புத்தூர் பகுதியில் சுவரொட் டிகள் ஒட்டியுள்ளனர். பொது இடங்கள், சிலவற்றில் அரசியல் கட்சியினரின் கொடிக்கம்பங்களும் இடம் பெற்றிருந்தன.

திருச்சி பாலக்கரை மேம்பால பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான சுவர்களில் பல்வேறு அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரங்கள் செய்திருந்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையொட்டி, அவற்றை நேற்று திருச்சி மாநகராட்சி பணியாளர்கள் வெள்ளை வர்ணம் பூசி அழித்தனர். சுவரொட்டிகள் கிழித்து எறியப்பட்டன. பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டன.

திருச்சி ஏர்போர்ட் எதிர்புறம் உள்ள ஜே.கே.நகரில் சுவர்களில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் தெரிவித்ததாவது:- இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலுக்கான கால அட்டவணையை நேற்று முன்தினம் வெளியிட்டது. எனவே, உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள தட்டிகள், விளம்பர பதாகைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பொது இடங்களில் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களை 24 மணி நேரத்திலும், தனியார் இடத்தில் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களை 48 மணி நேரத்திலும் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் சிவராசு தெரிவித்தார். இந்த ஆய்வின்போது அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். 

Next Story