தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 21 குழுக்கள் அமைப்பு கலெக்டர் தகவல்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 993 இடங்களில் 1,881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 21 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் சிவஞானம் தெரிவித்தார்.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் சிவஞானம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் விதிமுறை மீறல்களை கண்காணிக்க 21 கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 993 இடங்களில் 1,881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் பற்றி புகார் அளிக்கவும், பொதுமக்களுக்கு தேவையான தகவல்களை தரவும், 04562-1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அதிகாரியாக நான் (கலெக்டர்) நியமிக்கப்பட்டுள்ளேன். இடைத்தேர்தல் நடைபெறும் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு சாத்தூர் ஆர்.டி.ஓ. நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தில் விருது நகர் நாடாளுமன்ற தொகுதியில் அடங்கிய விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள விதிமீறல் புகார்கள் பற்றி என்னிடம் புகார் அளிக்கலாம்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிகளில் விதிமீறல் புகார்கள் பற்றி தென்காசி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரிக்கும், திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் விதிமீறல் புகார்கள் குறித்து ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரிக்கும் புகார் அனுப்பலாம்.
புகார்கள் ஆன்-லைன் மூலம் அனுப்பும் வசதி உள்ள நிலையில் அதற்கு இயலாத நிலையில் நேரடியாகவும் புகார் செய்யலாம். பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவை நடத்துவதற்கு 2 நாட்களுக்கு முன்னரே அந்த பகுதி போலீஸ் துணை சூப்பிரண்டுக்கோ, போலீஸ் நிலையத்துக்கோ விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அரசியல் விளம்பரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் தேர்தல் அறிவிப்பு வெளி வந்த 48 மணி நேரத்துக்குள் அகற்றப்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு அகற்றப் படாத நிலையில் போலீசார் சட்டவிதிமுறைகள் படி நடவடிக்கை எடுப்பர். தேர்தல் பிரசாரத்துக்காக சைக்கிள் பேரணி நடத்தினாலும் அதற்கும் உரிய அனுமதி பெற வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகள் யாராவது பாரபட்சமாக நடந்து கொண்டால் அது பற்றி தேர்தல் அதிகாரிக்கு புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதே போன்று போலீசாரின் நடவடிக்கையில் பாரபட்சம் இருப்பதாக உணர்ந்தால் அது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்யலாம். சொந்த வாகனங்களில் அரசியல் கட்சி கொடி கட்டி செல்லவும் தேர்தல் அதிகாரியிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு வேட்புமனு படிவம் எண்- 26 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த தேர்தலின் போது இரு பிரிவுகளாக இருந்த படிவம் தற்போது ஒரே படிவமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேட்புமனு படிவத்தை நிரப்பும் போது எந்த இடத்தையும் காலியாக விட்டு விடக் கூடாது. ஆம், இல்லை என்றாவது பூர்த்தி செய்ய வேண்டும். வேட்பு மனு படிவத்தை நிரப்புவதற்கு கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் அவர்களது ஆலோசனையை பெற்றுக்கொள்ளலாம்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் தங்கள் மீது ஏதாவது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தாலோ, குற்றவியல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு இருந்தாலோ தண்டனை பெற்று இருந்தாலோ, அது பற்றிய முழு விவரங்களை முன்னணி நாளிதழ்களில் 3 தடவை விளம்பரமாக பிரசுரிக்க வேண்டும். அரசியல் கட்சி வேட்பாளராக இருந்தால் அந்த கட்சியும் சுயேட்சை வேட்பாளராக இருந்தால் அந்தவேட்பாளரும் இந்த விளம்பரம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
பெண்களின் வாக்குப்பதிவு அதிகரிக்க பல்வேறு விழிப் புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ராஜபாளையம் பகுதியில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண்களுக்காக முற்றிலும் பெண் அதிகாரிகள் அடங்கிய வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்கள் வாக்குப்பதிவு செய்ய தேவையான உதவிகளை பெறுவதற்கு 1950 என்ற தொலைபேசி எண்ணையோ, பி.டபிள்யூ.டி. என்ற செயலியையோ பயன்படுத்தலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் நேர்மையாகவும், சுமூகமாகவும், அதிகஅளவில் வாக்குப்பதிவும் நடைபெற பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாக்குப்பதிவு தினத்தன்று மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறுவதாக இருந்தால் அன்றைய தினம் நடக்க உள்ள தேர்வு வேறு தேதிக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஜெகவீரபாண்டியன் உடன் இருந்தார்.
முன்னதாக கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோருக்கான தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடை பெற்றது.
இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அரசியல் கட்சி பிரதிநிதிகளின் தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு கலெக்டர் சிவஞானம் விளக்கம் அளித்தார்.
Related Tags :
Next Story