காளையார்கோவில்-கண்டதேவி பகுதிகளில் மாட்டு வண்டி பந்தயம்
காளையார்கோவில் மற்றும் கண்டதேவி பகுதிகளில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
காளையார்கோவில்,
காளையார்கோவிலை அடுத்த கொல்லங்குடி அருகே உள்ள கீரனூர் கருப்பர் கோவில் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் கீரனூர்-கொல்லங்குடி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 21 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 2 பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கீழவளவு சக்தி வண்டியும், 2-வது பரிசை அலங்காநல்லூர் கல்லணை விஸ்வா ரவிச்சந்திரன் வண்டியும், 3-வது பரிசை சிவகங்கை புதுப்பட்டி மணி வண்டியும் பெற்றன.
பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை காளையார்கோவில் பங்குராஜ் வண்டியும், 2-வது பரிசை சின்ன சூரக்குண்டு சின்ன அடைக்கி அம்மன் வண்டியும், 3-வது பரிசை பொன்குண்டுப்பட்டி கருணாநிதி வண்டியும் பெற்றன. சிறப்பு பரிசாக பிரவலூர் கணேசன், நகரம்பட்டி கண்ணன், காடனேரி நந்தகுமார் ஆகியோர் வண்டிகள் பெற்றன. வெற்றி பெற்ற அனைத்து மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதேபோல் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாட்டு வண்டி பந்தயம் தேரோடும் வீதியில் நடைபெற்றது. இதில் மொத்தம் 15 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 2 பிரிவாக நடைபெற்றன. முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 7 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை திருமயம் பரளி அபி வண்டியும், 2-வது பரிசை கண்டதேவி மருது சகோதரர்கள் வண்டி மற்றும் கொடுங்குளம் முருகன் ஆகியோர் வண்டியும், 3-வது பரிசை சிங்கதிருமுகப்பட்டி செல்லத்துரை வண்டியும் பெற்றன.
பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை திருமயம் பரளி செல்வி வண்டியும், 2-வது பரிசை தேவகோட்டை பிரசாத் மொபைல்ஸ் வண்டியும், 3-வது பரிசை கண்டதேவி மருது சகோதரர்கள் வண்டியும் பெற்றன. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story