வெவ்வேறு சம்பவங்களில் ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு உள்பட 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
விக்கிரமசிங்கபுரம்,
பாபநாசம் அகஸ்தியர் அருவி பகுதியில் யாரோ ஒருவர் பிணமாக கிடப்பதாக விக்கிரமசிங்கபுரம் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், சங்கரன்கோவில் சந்திரகிரியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 72) என்பதும், ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு என்பதும் தெரியவந்தது. கடந்த பல மாதங்களாக வாத நோயால் பாதிக்கப்பட்ட இவர், வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து அகஸ்தியர் அருவிக்கரை பகுதிக்கு வந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு அருகே உள்ள கீழதுவரைகுளத்தை சேர்ந்தவர் வேல்மயில் மகன் லட்சுமணன் (வயது 32). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் விவசாய பணிகளுக்காக கடன் வாங்கியதாகவும், அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஏர்வாடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story