திருப்பூரில் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட பெண் உள்பட 7 பேர் கைது - 80 பவுன்நகை, கார் பறிமுதல்


திருப்பூரில் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட பெண் உள்பட 7 பேர் கைது - 80 பவுன்நகை, கார் பறிமுதல்
x
தினத்தந்தி 11 March 2019 10:45 PM GMT (Updated: 11 March 2019 10:45 PM GMT)

திருப்பூரில் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட பெண் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார் மற்றும் 80 பவுன்நகை பறிமுதல் செய்யப்பட்டது.

நல்லூர்,

திருப்பூர் மாநகர் பகுதியில் கொள்ளை, திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வந்தன. குறிப்பாக வசதியானவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் பூட்டிக்கிடக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து திருடுதல், தனியாக நடந்து செல்லும் பெண்களை தாக்கி அவர்கள் அணிந்து இருக்கும் தங்க நகைகளை பறித்து செல்லுதல், வீடுகளில் குடியிருக்கும் முதியவர்களை தாக்கி, அங்கு இருக்கும் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து செல்லுதல் போன்ற சம்பவங்கள் திருப்பூர் மாநகர பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியது.

இதையடுத்து இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் ஆசாமிகளை பிடிக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் உத்தரவு படி, துணை கமிஷனர் உமா மேற்பார்வையில், உதவி கமிஷனர் நவீன்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ள ஆசாமிகளை தேடி வந்தனர். மேலும் சம்பவம் நடைபெற்ற வீடுகள் இருக்கும் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் திருப்பூர்-தாராபுரம் சாலையில் கோவில்வழி சோதனை சாவடியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை தடுத்து நிறுத்தி, காரை ஓட்டிவந்தவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை திருப்பூர் ஊரக போலீஸ் நிலையம் அழைத்து சென்று தனிப்படை போலீசார் விசாரித்தபோது, வீரபாபு என்கிற குட்டி (வயது 21), திண்டுக்கல் மாவட்டம் ஆர்.ஏ.ரோடு, திடீர்நகரை சேர்ந்தவர் என்றும், இவருடைய நண்பர்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் சேர்ந்து திருப்பூரில் பல்வேறு பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றதும் பல்வேறு வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து வீரபாபுவை போலீசார் கைது செய்தனர்.

இவர் கொடுத்த தகவலின் பேரில் கோவை செல்வபுரம் இந்திராநகரை சேர்ந்த சதீஸ்குமார் (42), வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காட்டேரி பகுதியை சேர்ந்த சங்கர் (36), திருப்பூர் திரு.வி.க.நகர் முதல் தெருவை சேர்ந்த தக்காளி என்கிற ரமேஷ் (30), திருவாரூர் மாவட்டம் என்கன் பகுதி பட்டக்கால் காலனி குருசக்தி என்கிற குருவி (31), திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (30) மற்றும் திருப்பூர் அம்மாபாளையம் அண்ணாநகரை சேர்ந்த ராம் என்பவரின் மனைவி கீதா (29) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு கார் மற்றும் 80 பவுன்நகை பறிமுதல் செய்யப்பட்டது. அதன்படி மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் மெக்கானிக்கான வெங்கடேசன் பலவஞ்சிப்பாளையத்தில் கார் ஒர்க்‌ஷாப் வைத்துள்ளார். குருசக்தி மீது தமிழகம் முழுவதும் 35 வழக்குகளுக்கு மேல் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அது குறித்து போலீசார் கூறியதாவது:-

இந்த திருட்டுக்கும்பலுக்கு குருசக்திதான் தலைவர். இவர்கள் அனைவரும் ஒரு காரில் வசதியானவர்கள் வாழும் பகுதிக்கு சென்று வீடு வாடகைக்கு கேட்பதுபோல் செல்வார்கள். அங்கு பூட்டிக்கிடக்கும் வீடுகள் குறித்து அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரிப்பார்கள். அப்போது பூட்டிக்கிடக்கும் வீடுகள் குறித்து அந்த வீட்டில் அருகில் உள்ளவர்கள் கொடுக்கும் தகவலை வைத்து, பூட்டிக்கிடக்கும் வீட்டின் உரிமையாளர் வெளியூர் சென்று இருப்பதை உறுதி செய்து கொண்டு நள்ளிரவு அங்கு சென்று தங்களது கைவரிசையை காட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

மேலும் திருட்டு சம்பவம் அரங்கேற்றம் செய்யவீட்டை அடையாளம் கண்ட பின்னர், அந்த வீட்டில் எப்படி திருடுவது, என்று பலவஞ்சிபாளையத்தில் உள்ள வெங்கடேசன் கார் ஒர்க்‌ஷாப்பில் ஆலோசனை நடத்துவார்கள். அந்த ஆலோசனைக்கு பிறகு திருட்டு மற்றும் கொள்ளையில், ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

Next Story