மானாமதுரை அருகே அரசு கொள்முதல் மையத்தில் நெல் வாங்க மறுப்பு விவசாயிகள் வேதனை


மானாமதுரை அருகே அரசு கொள்முதல் மையத்தில் நெல் வாங்க மறுப்பு விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 12 March 2019 4:00 AM IST (Updated: 12 March 2019 4:18 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் வாங்க மறுத்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மானாமதுரை,

மானாமதுரை வட்டாரத்தில் முத்தனேந்தல், மேட்டுமடை, கட்டிகுளம், இடைக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரம் எக்டேரில் நெல் விவசாயம் இந்த ஆண்டு நடைபெற்றுள்ளது. கோ-43, கோ-50 உள்ளிட்ட ரகங்கள் அதிக அளவு பயிரிடப்பட்டுள்ளன. தொடர்ந்து மழையில்லாததால், கிணற்று தண்ணீரை பயன்படுத்தி விவசாயத்தை முழுமையாக செய்துள்ளனர். மானாமதுரை வட்டாரத்தில் முத்தனேந்தல், வாகுடி, கட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு நெல் கொள் முதல் மையம் கடந்த மாதம் 2-ந் தேதி தொடங்கப்பட்டது.

இங்கு நாள் ஒன்றுக்கு 600 மூடைகள் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டன. இந்தநிலையில் கடந்த 2 தினங்களாக நெல் கொள் முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் காளிதாஸ், கருணாநிதி கூறுகையில், முத்தனேந்தல் வட்டாரத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டது. கிணற்று தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்துள்ளோம், இந்த ஆண்டு விவசாயத்திற்கு செலவு இரு மடங்காக உயர்ந்துள்ளது.

அரசு நெல் கொள் முதல் மையம் தாமதமாக தொடங்கப்பட்டு, தினசரி 600 மூடைகள் மட்டுமே வாங்குகின்றனர். இதனை விடுத்து கூடுதலாக நெல் மூட்டைகளை கொள் முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம், ஆனால் அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக நெல் கொள் முதல் செய்வதை நிறுத்தி விட்டனர். கிட்டங்கியில் போதிய இடவசதி இல்லை என்று காரணம் கூறுகின்றனர். இதனால் விவசாயிகள் தொடர்ந்து காத்துக்கிடக்கின்றனர். மேலும் கவலை அடைந்துள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் அரசு மையங்களில் கூடுதலாக நெல் மூடைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், தற்காலிக மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட நெல் மூடைகளை அனுப்பிய பின்பு தான் அடுத்து நெல் வாங்க முடியும். திடீரென மழை பெய்தால் நெல் மூடைகள் சேதமடைந்து விடும், எனவே கொள்முதலை நிறுத்தியுள்ளோம், அரசு நாள் ஒன்றுக்கு 600 மூட்டைகள் மட்டுமே நெல் கொள் முதல் செய்ய உத்தரவிட்டுள்ளது. எனவே அதன்படி வாங்குகின்றோம் என்றனர்.

Next Story