போக்குவரத்து போலீசாருக்கு வெப்பத்தை தடுக்கும் விஷேச தொப்பி


போக்குவரத்து போலீசாருக்கு வெப்பத்தை தடுக்கும் விஷேச தொப்பி
x
தினத்தந்தி 12 March 2019 3:45 AM IST (Updated: 12 March 2019 4:18 AM IST)
t-max-icont-min-icon

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே சுட்டெரிக்கும் வெயிலை சமாளிப்பதற்காக போக்குவரத்து போலீசாருக்கு விஷேச தொப்பி வழங்கப்பட்டுள்ளது.

காரைக்குடி,

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடுமையான வெயில் சுட்டெரித்து வருவதால் அதற்கு முன்பாக பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கோடைக்கால விடுமுறை சுமார் 45 நாட்கள் வரை விடப்படும். இது தவிர ஒவ்வொரு ஆண்டும் மே மாதங்களில் ஒரு குறிப்பிட்ட நாட்களில் அக்னி நட்சத்திரம் மக்களை வாட்டி வதைக்க தொடங்கி விடும். இந்த வெயிலை சமாளிக்க பெரும்பாலான மக்கள் தங்களுடைய குடும்பத்துடன் தமிழகத்தில் உள்ள கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட குளுமையான இடங்களுக்கு சுற்றுலா செல்வது உண்டு.

இது தவிர வசதி வாய்ப்பு பெற்றவர்கள், லண்டன், நியூசிலாந்து, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்று இந்த கோடை வெயில் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்வதும் உண்டு. ஆனால் அரசு அலுவலர்கள், தனியார் அலுவலர்கள் மற்றும் அன்றாடம் வேலை செய்து பிழைப்பு நடத்தி வருபவர்களின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரியதாகும். இது தவிர போக்குவரத்து போலீசார் சுமார் 12மணி நேரம் வரை கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் நின்று போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, சிங்கம்புணரி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கோடை காலத்திற்கு முன்பாகவே தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் மதிய நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் தொடங்கும் அக்னி நட்சத்திரத்தின் போது தமிழகம் முழுவதும் போக்குவரத்து போலீசாருக்கு வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் தெர்மாகோல் உள்ளிட்ட பொருட்களால் தயாரான தொப்பிகள் வழங்கப்படுவது உண்டு.

இதுதவிர அவர்களுக்கு மதிய வேளையில் உடலை குளுமையாக வைக்கும் பொருட்டு மோர், ஜூஸ் உள்ளிட்ட பானங்கள் வழங்கப்படும். ஆனால் தற்போது இந்த வருடம் மார்ச் மாத தொடக்கத்திலேயே வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், காரைக்குடி பகுதியில் பணியாற்றி வரும் போலீசாருக்கு இந்த விஷேச தொப்பி மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பணியில் ஈடுபட்ட போலீசார் ஒருவர் கூறியதாவது:- கடந்த வருடத்தை காட்டிலும் இந்தாண்டு பிப்ரவரி மாதம் முதலே காரைக்குடி பகுதியில் வெயில் மக்களை வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. இதில் இருந்து காத்துக்கொள்ளும் பொருட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், போக்குவரத்து போலீசாருக்கு வெயில் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ளும் வகையிலும், குளுமையாக இருக்கும் பொருட்டு இந்த தொப்பி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர போலீசாருக்கு பணியின் போது மோர் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Next Story