தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: பேனர்கள், சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற வேண்டும் கலெக்டர் பிரபாகர் உத்தரவு


தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: பேனர்கள், சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற வேண்டும் கலெக்டர் பிரபாகர் உத்தரவு
x
தினத்தந்தி 11 March 2019 11:01 PM GMT (Updated: 11 March 2019 11:01 PM GMT)

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பேனர்கள், சுவரொட்டிகளை உடனடியாக அகற்றிட வேண்டும் என்று கலெக்டர் பிரபாகர் கூறினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் ஓசூர் சட்டசபை தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 19-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. 26-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 27-ந் தேதி நடக்கிறது.

வருகிற 29-ந் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. வருகிற மே மாதம் 23-ந் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதை கண்காணிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், புள்ளியல் பிரிவுகளை சேர்ந்த குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் 8 மணி நேரம் வீதம் நாள்தோறும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணிபுரிகிறார்கள்.

மேலும் பேனர்கள், சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள் ஆகியவற்றை அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அரசு சார்ந்த கட்டிடங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலைய பகுதிகளில் செய்யப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் செலவு கணக்குகள் கண்காணிக்கப்படும். மேலும் அவர்களின் பிரசாரங்கள் வீடியோவில் பதிவு செய்யப்படும்.

கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் முறைகேடுகள் நடைபெறுகிறதா? என கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் பணியாளர்களின் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படுகிறது. எங்கேனும் பிரச்சினைகள் நடந்தால் பொதுமக்கள் தகவல் கூறும் பட்சத்தில் அந்த இடத்தின் அருகில் இருக்கும் அலுவலர்களை அங்கு விரைந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் மொத்தம் 1,855 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த முறை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் யாருக்கு வாக்களித்தோம் என்பதை கண்டறிய கூடிய வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்புக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பணத்தை எடுத்து செல்வதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. ரூ.50 ஆயிரமோ, அதற்கு மேலோ கொண்டு சென்றால் அதற்கு உரிய ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழக, கர்நாடக, ஆந்திர மாநில எல்லையில் உள்ளது. எனவே மாநில எல்லையில் உள்ள 12 சோதனைச்சாவடிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அருகில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உடன் இருந்தார்.

தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படை வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான டாக்டர் எஸ்.பிரபாகர் அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சி கூட்டம் நடந்தது.

இதில் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து கலெக்டர் பிரபாகர் அரசியல் கட்சி பிரமுகர்களிடம் எடுத்து கூறினார்.

Next Story