தேர்தல் நடத்தை விதிமுறை அமல்: ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லும் பணம் பறிமுதல் கலெக்டர் ஆசியா மரியம் எச்சரிக்கை


தேர்தல் நடத்தை விதிமுறை அமல்: ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லும் பணம் பறிமுதல் கலெக்டர் ஆசியா மரியம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 March 2019 11:10 PM GMT (Updated: 11 March 2019 11:10 PM GMT)

தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்து இருப்பதால் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும் என கலெக்டர் ஆசியா மரியம் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாமக்கல் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான விளக்க கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு முன்னிலை வகித்தார். கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. 26-ந் தேதி கடைசிநாள் ஆகும். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளபடி, விதிமுறைகளை கடைபிடித்து வேட்புமனு தாக்கல் செய்ய வருகைத்தர வேண்டும். தேர்தலுக்காக பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் ஆகியவை தலா 18 வீதம் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிக்கப்படுகின்றன.

மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் சம்பந்தமான புகார்களை கண்காணிக்க 24 மணி நேரமும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து பணிகளை மேற்கொள்வார்கள். வாக்காளர் தொடர்பான அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாவட்ட இலவச தொலைபேசி அழைப்பு எண் 1950-ஐ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது :-
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியிலும் 6 லட்சத்து 88 ஆயிரத்து 450 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 9 ஆயிரத்து 807 பெண் வாக்காளர்களும், 108 திருநங்கைகளும் என மொத்தம் 13 லட்சத்து 98 ஆயிரத்து 365 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 6 சட்டமன்ற தொகுதிகளிலும், சம்பந்தப்பட்ட தாசில்தார்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஒருங்கிணைந்து பணியினை மேற்கொள்வார்கள். இக்குழுவினர் நேற்று முதல் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் விளம்பர பதாகைகள், விளம்பர தட்டிகளை அகற்றும் பணிகள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தனியார் கட்டிடங்களில் உள்ள விளம்பரங்களை அகற்ற 72 மணிநேரம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்து இருப்பதால் ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, உரிய ஆவணங்கள் காண்பித்த பிறகு திரும்ப ஒப்படைக்கப்படும். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 1,657 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அவற்றில் பதற்றமான வாக்குச்சாவடிகள் 248 ஆகும்.

மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் 3 ஆகும். இது பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நஞ்சப்பகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள 3 வாக்குச்சாவடிகள் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்பட அனைத்துதுறை அலுவலர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Next Story