தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அமைச்சர்கள் அரசு கார்களை ஒப்படைத்தனர்


தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அமைச்சர்கள் அரசு கார்களை ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 11 March 2019 11:16 PM GMT (Updated: 11 March 2019 11:16 PM GMT)

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் பயன்படுத்தி வந்த அரசு கார்களை ஒப்படைத்தனர்.

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முன் தினம் முதல் அமலுக்கு வந்துள்ளன. இதைத்தொடர்ந்து நகரில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள், அரசியல் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் அரசியல் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டிகளையும் நகராட்சி ஊழியர்கள் கிழித்து எறிந்து வருகின்றனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களிடம் கடிதம் பெற்று உதவியாளர்களாக பணிபுரிந்து வந்த அரசு ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் துறைகளுக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு பணிபுரிந்து வந்த சுமார் 600 பேர் தங்களது துறை பணிகளுக்கு திரும்பினார்கள்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் அரசு கார்களை அரசு நிகழ்ச்சிகள் தவிர மற்ற பயன்பாட்டிற்கு உபயோகிக்க தடை உள்ளது. எனவே அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் பயன்படுத்திய அரசு கார்களை ஒப்படைத்துள்ளனர். அந்த கார்கள் சட்டமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் தங்கள் சொந்த கார்களையே பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, நிதியுதவி அளிப்பது போன்ற திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் சட்டசபைக்கு பயனாளிகள் வருவது நேற்றுடன் நின்றுபோனது. இதுபோன்றவற்றில் பயன்பெறும் பயனாளிகள் யாரும் வராததால் சட்டமன்ற வளாகமே வெறிச்சோடி காணப்பட்டது.

முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று சட்டசபைக்கு வந்து சிறிது நேரம் அலுவலக பணிகளை கவனித்துவிட்டு புறப்பட்டு சென்றார். முக்கிய அரசியல் கட்சிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யும் சமயத்தில் புதுவையில் தேர்தல் பணிகள் சூடு பறக்கும் நிலை உள்ளது.

Next Story