சட்டசபையை முற்றுகையிட முயன்ற சட்டக்கல்லூரி மாணவர்கள் போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு


சட்டசபையை முற்றுகையிட முயன்ற சட்டக்கல்லூரி மாணவர்கள் போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 12 March 2019 4:46 AM IST (Updated: 12 March 2019 4:46 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சட்டசபையை சட்டக்கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

புதுச்சேரி,

புதுவை பாகூர் அருகே உள்ள நிர்ணயப்பட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை நிகழ்ச்சி கடந்த 8-ந்தேதி நடந்தது. இதையொட்டி அங்கு இசை நிகழ்ச்சியும் நடந்தது.

அப்போது ஒரு பிரிவினர் தாங்கள் விரும்பும் பாடலை இசைக்கவேண்டும் என்று தப்பாட்ட கலைஞர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் தப்பாட்ட கலைஞர்களை தாக்கியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி நேற்று சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் புதுவை சட்டசபையை முற்றுகையிட முயன்றனர்.

அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்று மாணவர்களை எச்சரித்தனர்.

தொடர்ந்து மாணவர்கள் கோஷம் எழுப்பவே அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக சட்டசபை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story