மாணவிகள் பாலியல் பலாத்கார வழக்கு திருநாவுக்கரசு உள்பட 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
மாணவிகள் பாலியல் பலாத்கார வழக்கில் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
கோவை,
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள்-இளம் பெண்களை மயக்கி, ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 27), அவருடைய நண்பர்கள் சபரிராஜன் (27), சதீஷ் (27), வசந்தகுமார் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மீது பாலியல் தொந்தரவு செய்தல், வழிப்பறியில் ஈடுபடுதல், விருப்பம் இல்லாமல் பெண்களை ஆபாச படம் எடுத்தல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது அவர்கள் 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் 4 பேரும் ஜாமீனில் வெளியே வந்தால் சாட்சியங்களை அழித்து விடுவார்கள் என்பதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக பொள்ளாச்சி போலீசாரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.
எனவே அவர் இது தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து திருநாவுக்கரசு உள்பட 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். தற்போது அவர்கள் கோவை மத்திய சிறையில் இருப்பதால், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான நகலை போலீசார் அவர்கள் 4 பேரிடம் வழங்கினார்கள்.
இது தொடர்பாக பொள்ளாச்சியை சேர்ந்த வக்கீல்கள் சங்க முன்னாள் தலைவர் மீரான் மொய்தீன் கூறியதாவது:-
ஒரு குற்றவாளி தொடர் குற்றவாளியாக இருந்தால், அந்த குற்றவாளி வெளியே இருக்கும் பட்சத்தில் அவர் திரும்பவும் குற்றச்செயலை செய்து கொண்டே இருப்பார் என்பது தெரிந்தால் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போட முடியும். ஒரே ஒரு வழக்கை மட்டும் வைத்து குண்டர் தடுப்பு சட்டம் போட்டால் அந்த வழக்கு நிற்காது.
இதுவரை போலீசாரால் போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட வழக்குகளில் 90 சதவீத வழக்குகள் கோர்ட்டு மூலம் நீக்கப்பட்டு உள்ளது. தற்போது திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மீது போடப்பட்டு உள்ள குண்டர் தடுப்பு சட்டம் கண்துடைப்பு நாடகம் ஆகும்.
இதுபோன்ற வழக்கில் பாதிக்கப்பட்டவர்களை கோர்ட்டில் நிறுத்தி அவர்களின் அடையாளங்களை மறைத்து புகார் பெற சட்டத்தில் இடம் இருக்கிறது. ஒரு போலீஸ் ஐ.ஜி. மீது பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் சூப்பிரண்டு பாலியல் புகார் கொடுத்தபோது, அந்த புகாருக்கே உரிய நடவடிக்கையை அரசால் எடுக்க முடியவில்லை.
இதற்கிடையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றுவதால் எவ்வித நியாயமும் கிடைக்காது. போலீஸ் உயர் அதிகாரிக்கே நியாயம் கிடைக்கவில்லை என்றால் அப்பாவி பெண்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்? என்று பொதுமக்களிடையே கேள்வியை எழுப்பி உள்ளது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க மற்றும் முக்கிய குற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுக்க ஒரே வழி, கோர்ட்டின் நேரடி பார்வையில் இந்த வழக்கை புலன் விசாரணை மேற்கொள்வதுதான். அதை செய்ய முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story