திருப்பூரில், பனியன் நிறுவன குடோனில் தீவிபத்து - பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்


திருப்பூரில், பனியன் நிறுவன குடோனில் தீவிபத்து - பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 13 March 2019 4:30 AM IST (Updated: 13 March 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பனியன் நிறுவன குடோனில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. இது பற்றிய விவரம் வருமாறு:-

திருப்பூர்,

திருப்பூர்- மங்கலம் ரோடு தெற்கு தீயணைப்பு நிலையம் அருகில் பிரபல தனியார் பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த பனியன் நிறுவனத்திற்கு சொந்தமான மூலப்பொருட்கள் சேமித்து வைக்கும் குடோன் ஒன்றும் அந்த பகுதியில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பனியன் நிறுவனத்தில் தங்கள் பணிகளை முடித்து விட்டு வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது மூலப்பொருட்கள் சேமித்து வைத்திருக்கும் குடோனில் இருந்து திடீரென கரும்புகை எழுந்துள்ளது. சிறிது நேரத்தில் குடோனில் மளமளவென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இது குறித்து நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு ஏராளமான நிறுவன தொழிலாளர்கள் குவிந்தனர். அதற்குள் இந்த தீ குடோன் அருகில் நிறுத்தி வைத்திருந்த நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்சிலும் பற்றி எரிய தொடங்கியது.

இந்த தீயை அங்குள்ள தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். அருகிலேயே தீயணைப்பு நிலையம் இருந்ததால், சம்பவத்தை பார்த்ததும், தீயணைப்பு படை வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் நிறுவன தொழிலாளர்கள் உதவியுடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து குடோனில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ தொடர்ந்து பற்றி எரிந்து கொண்டே இருந்தது. சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மூட்டமாக காணப்பட்டது. குடோனில் சேமித்து வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எலாஸ்டிக்குகள், பாலித்தீன் பைகள் உள்பட ஏராளமான மூலப்பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

Next Story