தாக்கப்பட்டதற்கு கண்டனம்: குழித்துறை மறைமாவட்ட ஆயருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் ஆறுதல்


தாக்கப்பட்டதற்கு கண்டனம்: குழித்துறை மறைமாவட்ட ஆயருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் ஆறுதல்
x
தினத்தந்தி 12 March 2019 11:00 PM GMT (Updated: 12 March 2019 9:02 PM GMT)

குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாசை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது ஆயர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

களியக்காவிளை,

குழித்துறை மறைமாவட்ட ஆயராக இருப்பவர் ஜெரோம் தாஸ். குழித்துறை மறை மாவட்டத்துக்கு உட்பட்ட அப்பட்டுவிளையில் புனித சூசையப்பர் மற்றும் புனித அந்தோணியார் ஆகிய 2 ஆலயங்கள் உள்ளன. இந்த 2 ஆலய பங்குக்கு சொந்தமான சொத்து பிரச்சினை இரு ஆலய மக்களிடையே நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண குழித்துறை மறைமாவட்டம் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் தீர்வு காணமுடியவில்லை.

இந்தநிலையில் சம்பவத்தன்று அந்தோணியார் ஆலய பங்கு மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண ஆயர் இல்லம் வந்தனர்.

அப்போது, அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆயர் ஜெரோம்தாஸ் மற்றும் காவலாளி மனோகரன் ஆகியோர் தாக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக 58 பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், ஆயர் ஜெரோம் தாசை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, “ஆயர் தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. ஆயர் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.

இந்த சந்திப்பின்போது, அவருடன் பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், உண்ணாமலை கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயசீலன், வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் விஜயபிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story