தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் நாகர்கோவிலில் ஜெயலலிதா மணல் சிற்பம் அகற்றம்


தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் நாகர்கோவிலில் ஜெயலலிதா மணல் சிற்பம் அகற்றம்
x
தினத்தந்தி 13 March 2019 4:30 AM IST (Updated: 13 March 2019 2:36 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் நாகர்கோவிலில் ஜெயலலிதா மணல் சிற்பம் அகற்றப்பட்டது. இதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

நாகர்கோவில்,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து குமரி மாவட்ட அதிகாரிகள் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளிலும், தேர்தல் முறைகேடுகளை தடுக்கும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதிலும் கடந்த 2 நாட்களாக அதிகாரிகள் தீவிரமாக முனைப்பு காட்டினர். பொது இடங்கள் மற்றும் அரசு துறைகளுக்கு சொந்தமான கட்டிடங்கள், சுற்று சுவர்கள் போன்றவற்றில் அனுமதியின்றி ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், விளம்பர பலகைகள், சுவர் விளம்பரங்கள் ஆகியவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்காக மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் மேற்பார்வையில் என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், நகர்நல அதிகாரி கின்சால், நகரமைப்பு அதிகாரி விமலா, வருவாய் அதிகாரி குமார்சிங் ஆகியோர் தலைமையில் 4 தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் தலா 13 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள், விளம்பர பலகைகள் அகற்றும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று காலையில் இருந்து நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்கள், அரசுத்துறை கட்டிடங்கள், சுவர்கள் போன்றவற்றில் எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், பல்வேறு அமைப்புகளின் சுவர் விளம்பரங்கள் ஆகியவற்றின் மீது வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்றது.

இன்று (புதன்கிழமை) நாகர்கோவிலில் நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்கிறார். இதையொட்டி அவரை வரவேற்று நகரின் பல்வேறு பகுதிகளிலும், முக்கிய சாலைகளிலும் வைக்கப்பட்டு இருந்த வரவேற்பு பேனர்கள் மற்றும் கொடி-தோரணங்கள் ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி மாநகராட்சி அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனர். இதனால் சில இடங்களில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும், மாநகராட்சி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் அவற்றை அகற்றி எடுத்து சென்றனர்.

மேலும் நாகர்கோவில் டதி பள்ளி சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., ம.தி.மு.க. போன்ற அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டன. அறுத்து எடுக்க முடியாத கொடிக்கம்பங்களை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளும் துணியால் மூடப்பட்டன. கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு படையினரும் ஈடுபட்டனர்.

நாகர்கோவில் வடசேரி சந்திப்பு பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை அருகில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மணல் சிற்பம் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து நேற்று காலை நகரில் ஆய்வு செய்த நாகர்கோவில் உதவி கலெக்டர் விஷ்ணு சந்திரன் வடசேரி பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் மணல் சிற்பத்தையும் பார்வையிட்டார்.

பின்னர் அதை உடனடியாக அகற்ற ஆணையருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நகரமைப்பு அலுவலர் விமலா தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணல் சிற்பத்தை அகற்றினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது. இதையொட்டி அங்கு ஏராளமான போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

Next Story