குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது
திருப்பூரில் புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்த வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 250 கிலோ புகையிலை பொருட்கள், வேனை பறிமுதல் செய்தனர்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் பி.என்.ரோடு பகுதிகளில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின் பேரில் நுண்ணறிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு மேற்பார்வையில் அனுப்பர்பாளையம், திருமுருகன்பூண்டி நுண்ணறிவு போலீஸ் ஜாய் சார்லி, மகாராஜா உள்ளிட்ட போலீசார் பிச்சம்பாளையம் 4 ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடையில் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அந்த கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். அப்போது பொம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
பின்னர் போலீசார் சம்பந்தப்பட்ட அந்த குடோனிற்கு சென்று சோதனை நடத்திய போது அங்கு மூடை, மூடையாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கோவை மாவட்டம் சோமனூரில் இருந்து புகையிலை பொருட்களை வேனில் ஏற்றி வந்து குடோனில் பதுக்கி வைப்பதும், பின்னர் மோட்டார்சைக்கிளில் வைத்து காலை நேரங்களில் சிறிய கடை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டிருப்பதும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லீலாராம் (வயது 28), கோபால்சிங் (29) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் குடோனில் பதுக்கி வைத்திருந்த 250 கிலோ புகையிலை பொருட்களையும், விற்பனைக்கு பயன்படுத்தி வந்த வேன் மற்றும் மோட்டார்சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story