தேவையான அளவு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன: மாவட்டத்தில் 153 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை கலெக்டர் பேட்டி


தேவையான அளவு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன: மாவட்டத்தில் 153 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 13 March 2019 4:30 AM IST (Updated: 13 March 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

தேவையான அளவு வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பதாகவும், திருச்சி மாவட்டத்தில் 153 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் கலெக்டர் சிவராசு தெரிவித்தார்.

திருச்சி,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி நடக்கிறது. அதையொட்டி, வேட்புமனு தாக்கல் வருகிற 19-ந் தேதி முதல் தொடங்குகிறது. இந்தநிலையில் திருச்சி மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான எஸ்.சிவராசு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்ததையொட்டி, அரசு கட்டிடங்களில் வரையப்பட்டுள்ள விளம்பரங்கள் 24 மணி நேரத்திலும், பொதுத்துறை நிறுவனங்களில் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் 48 மணி நேரத்திலும், அனைத்து தனியார் நிறுவனங்களிலும் வரையப்பட்ட சுவர் விளம்பரங்கள் 72 மணி நேரத்திலும் அகற்றுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த ‘கெடு’ இன்றுடன் முடிகிறது. அதைமீறி வரையப்படும் விளம்பரங்கள் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 4 சட்டமன்ற தொகுதிகளும், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் 4 சட்டமன்ற தொகுதிகளும், கரூர் பாராளுமன்ற தொகுதியில் 1 சட்டமன்ற தொகுதியும் இடம் பெற்றுள்ளது.

மாவட்டம் முழுமையும் அடங்கிய 9 சட்டமன்ற தொகுதிகளில் 2,533 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 153 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். தேர்தல் நடைபெறும் நேரங்கள் கோடை காலம் என்பதால் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தேவையான குடிநீர் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் 22 லட்சத்து 21 ஆயிரத்து 674 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 10 லட்சத்து 84 ஆயிரத்து 110 பேர். பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 37 ஆயிரத்து 378 பேர். மூன்றாம் பாலினம்(திருநங்கைகள்) 186 பேர் ஆவர். இதுதவிர சர்வீஸ் ஓட்டுகள்(மிலிட்டரி) 1,202-ம் உள்ளது.

புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 37,740 விண்ணப்பங்கள் வந்துள்ளன. 28,059 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. 1,928 தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. கிட்டத்தட்ட 80 சதவீதம் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். விரைவில் இணைப்பு பட்டியல் வெளியிடப்படும்.

வாக்குப்பதிவுக்கு தேவையான அளவு மின்னணு எந்திரங்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்-6,195, கட்டுப்பாட்டு எந்திரம்-3,312 மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என அறியும் வி.வி.பேட் கருவி-3,256 தயார் நிலையில் உள்ளது. தேர்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க 1950 என்ற எண்ணையும், மேலும் கட்டுப்பாட்டு அறை எண் 0431-2414756, 0431-241457, 0431-241458, 0431-241459, என்ற எண்களிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவருத்ரய்யா, தேர்தல் தாசில்தார் முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story