நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) இடையே தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல் மைசூரு தொகுதிக்கு போட்டா போட்டி


நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) இடையே தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல் மைசூரு தொகுதிக்கு போட்டா போட்டி
x
தினத்தந்தி 12 March 2019 11:30 PM GMT (Updated: 12 March 2019 9:36 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த நிலையில் தொகுதி பங்கீட்டில் இரு கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. குறிப்பாக மைசூரு தொகுதியை இரு கட்சிகளுமே விரும்புவதால் போட்டா போட்டி நிலவுகிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி களின் கூட்டணி அரசு நடக்கிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி பணியாற்றி வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் அடுத்த மாதம்(ஏப்ரல்) 18, 23-ந் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது.

மனுத்தாக்கலுக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இடையே இன்னும் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படவில்லை. மாநில அளவிலான தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

அதன் பிறகு ஜனதா தளம்(எஸ்) தேசிய தலைவர் தேவேகவுடா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதி பங்கீடு குறித்து விவாதித்தனர். ஆனாலும் தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடித்து வருகிறது. ஜனதா தளம்(எஸ்) 10 தொகுதிகளை கேட்கிறது. காங்கிரசார் அதிகபட்சமாக 7 தொகுதிகளை ஒதுக்கும் மனநிலையில் உள்ளனர். ஜனதா தளம்(எஸ்) கட்சியை பொறுத்தவரையில் தென் கர்நாடக பகுதியில் தான் பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. வட கர்நாடகத்தில் அந்த கட்சிக்கு குறிப்பிடும் அளவுக்கு செல்வாக்கு இல்லை.

அதனால் தங்களுக்கு தென் கர்நாடக பகுதியில் தொகுதிகளை ஒதுக்கி கொடுக்கும்படி காங்கிரஸ் கட்சியிடம் தேவேகவுடா வலியுறுத்தியுள்ளார். தொகுதி பங்கீடு முடிந்த பிறகு, தொகுதிகளை ஒதுக்குவதிலும் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.

ஜனதா தளம்(எஸ்) கட்சி ஹாசன், மண்டியா, மைசூரு, சிக்பள்ளாப்பூர், துமகூரு, பெங்களூரு வடக்கு, கோலார் ஆகிய தொகுதிகளை கேட்கிறது. இதில் மண்டியா மற்றும் ஹாசன் தொகுதிகளை ஒதுக்குவதாக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே கூறிவிட்டது.

ஆனால் மைசூரு, சிக்பள்ளாப்பூர், கோலார், துமகூரு உள்ளிட்ட தொகுதிகளை வழங்க காங்கிரஸ் மறுத்து வருகிறது. ஹாசன் மற்றும் மண்டியாவில் தேவேகவுடாவின் 2 பேரன்கள் போட்டியிடுகிறார்கள். அதனால் தேவேகவுடா பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

இன்னொருபுறம், அவர் மைசூரு தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் எக்காரணம் கொண்டும், மைசூரு தொகுதியை விட்டுக்கொடுக்க முடியாது என்று சித்தராமையா திட்டவட்டமாக கூறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மைசூரு மாவட்டத்தில் ஏற்கனவே 2 மந்திரிகள் உள்ளனர் என்றும், எம்.பி.யையும் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு விட்டுக்கொடுத்துவிட்டால், காங்கிரசுக்கு பிடிமானமே இல்லாத நிலை ஏற்பட்டுவிடும் என்றும் சித்தராமையா, கட்சி மேலிட தலைவர்களிடம் கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது.

காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் தேவேகவுடா, மைசூரு தொகுதியை தனக்கு ஒதுக்கினால் அதில் தான் போட்டியிடுவதாவும், இல்லாவிட்டால் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாகவும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மைசூரு தொகுதிக்கு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளுக்கு இடையே போட்டா போட்டி எழுந்துள்ளது.

துமகூரு தொகுதி வேண்டுமென்றால் மண்டியா தொகுதியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை கா்நாடக காங்கிரஸ் தலைவர்கள் விதிக்கிறார்கள். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு செய்வது மற்றும் தொகுதிகளை ஒதுக்குவதில் பெரும் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதை வருகிற 16-ந் தேதிக்குள் முடிவு செய்து தெரிவிக்கும்படி கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.

Next Story