விழுப்புரம் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில், டிராக்டர் டிரைவர் மயங்கி விழுந்து சாவு - சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச்சென்றபோது பரிதாபம்
விழுப்புரம் மாவட்டத்தில் வெயில் சுட்டெரிக்கிறது. இந்த வெயிலால் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர் டிரைவர் மயங்கி விழுந்து இறந்தார்.
விக்கிரவாண்டி,
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயிலின் அளவு சதத்தை தொட்ட நிலையில் விழுப்புரத்திலும் கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமை அதிகமாக இருந்து வருகிறது. நேற்றும் வழக்கம்போல் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மதிய வேளையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி 100 டிகிரியாக பதிவானது.
இந்த வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கிரவாண்டி அருகே டிராக்டர் டிரைவர் ஒருவர் மயங்கி விழுந்து இறந்தார். இதுபற்றிய விவரம் வருமாறு:-
விழுப்புரத்தை அடுத்த வளவனூரை சேர்ந்தவர் நடேசன் மகன் முருகன் (வயது 47), டிராக்டர் டிரைவரான இவர் நேற்று குடுமியான்குப்பத்தை சேர்ந்த ராஜாராமன் என்பவரது டிராக்டரில் கரும்பு லோடுகளை ஏற்றிக்கொண்டு முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலைக்கு சென்றார்.
பின்னர் அங்குள்ள யார்டில் டிராக்டரை நிறுத்திவிட்டு ‘டோக்கன்’ வாங்க சென்றார். அப்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அதற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முருகன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story