திருமண மண்டபம், கூட்ட அரங்குகளில் அரசியல் தொடர்புடைய கூட்டங்கள் நடந்தால் தெரிவிக்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு


திருமண மண்டபம், கூட்ட அரங்குகளில் அரசியல் தொடர்புடைய கூட்டங்கள் நடந்தால் தெரிவிக்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 13 March 2019 3:00 AM IST (Updated: 13 March 2019 4:01 AM IST)
t-max-icont-min-icon

திருமண மண்டபம், கூட்ட அரங்குகளில் அரசியல் தொடர்புடைய கூட்டங்கள் நடந்தால் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசினார்.

வேலூர்,

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்த விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக திருமண மண்டபம், கூட்ட அரங்கம், டிஜிட்டல் பேனர் அச்சக உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமைதாங்கி பேசியதாவது:-

திருமண மண்டபம் மற்றும் கூட்ட அரங்கில் வெளியூரில் இருந்து கூட்டமாக வந்து தங்குவதற்கு உரிமையாளர்கள் அனுமதி வழங்க கூடாது.

திருமண மண்டபம் மற்றும் கூட்ட அரங்கில் திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் தவிர வேறு எவ்வித அரசியல் தொடர்புடைய கூட்டங்கள் நடைபெற பதிவு செய்யப்பட்டால் அதன் விவரத்தினை முன்கூட்டியே தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.

சுபநிகழ்ச்சிகள் என்ற பெயரில் மக்களை கூட்டி பரிசு பொருட்கள் வழங்குவது, பணம் கொடுப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக அறியப்பட்டால் அதனை உடனடியாக அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும். சுபநிகழ்ச்சிகள் என்ற பெயரில் மக்களைக் திரட்டி உணவு பொட்டலங்கள் மற்றும் சாப்பாடு வழங்குதல் கூடாது. அவ்வாறு நடந்தால் அதுகுறித்த தகவலை உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர் மற்றும் படம் உள்ள பேனர், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டால் அதன் விவரத்தினை தெரிவிக்க வேண்டும்.

தங்கும் விடுதிகளில் தேர்தல் நடைபெறும் காலங்களில் உரிய அடையாள அட்டைகளை சரிபார்த்த பின்னரே தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஆயுதங்களையோ, பொருட்களையோ வைத்திருக்க அனுமதிக்க கூடாது.

இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும். பேனர், சுவரொட்டிகள், துண்டு பிரசுரம் போன்றவற்றில் அச்சிடுபவர் மற்றும் வெளியிடுபவர் பெயர், முகவரி, எத்தனை எண்ணிக்கையில் நகல்கள் அச்சடிக்கப்பட்டன என்ற விவரங்கள் தெளிவாக முன்பக்கத்தில் அச்சடிக்கப்பட வேண்டும்.

தேர்தல் விளம்பரம் வெளியிடுபவர் விளம்பரத்தில் கையொப்பம் இட வேண்டும். அவரது கையொப்பத்தை வெளியிடுபவரை அறிந்த 2 நபர்கள் மேலோப்பம் செய்ய வேண்டும். இதுபோன்ற சட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது 6 மாத காலம் வரை சிறை தண்டனையும் அல்லது ரூ.2 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜ்குமார் (தேர்தல்), திருமண மண்டபம், கூட்ட அரங்கம், அச்சக உரிமையாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Next Story