தூத்துக்குடி அருகே பரபரப்பு: இலங்கைக்கு கடத்த பதுக்கிய 1½ டன் கடல் அட்டை பறிமுதல் வாலிபர் கைது


தூத்துக்குடி அருகே பரபரப்பு: இலங்கைக்கு கடத்த பதுக்கிய 1½ டன் கடல் அட்டை பறிமுதல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 March 2019 4:00 AM IST (Updated: 13 March 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1½ டன் கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையை அடுத்த முடிவைத்தானேந்தல் அருகில் ராமர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சிலர் கடல் அட்டைகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அவரது உத்தரவின்பேரில், தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ் மேற்பார்வையில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு நேற்று சென்றனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த 5-க்கும் மேற்பட்டவர்கள் தப்பி சென்று விட்டனர்.

போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு 1½ டன் எடையுள்ள கடல் அட்டைகள் பாதி பதப்படுத்தப்பட்ட நிலையிலும், மீதி பதப்படுத்த தயார் நிலையிலும் வைத்து இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கு பதுங்கி இருந்த தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த முகமது இதரிஷ் மகன் மன்சூர் அலி (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர்கள், இந்த கடல் அட்டைகளை ராமேசுவரத்துக்கு கொண்டு சென்று, அங்கு இருந்து இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கடல் அட்டையை கடத்தி செல்ல பயன்படுத்தி வந்த ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடல் அட்டைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா பார்வையிட்டார்.

விசாரணைக்கு பின்னர் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் மன்சூர் அலியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். இலங்கைக்கு கடத்த பதுக்கிய 1½ டன் கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story