தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் திரையிடும் பணி கலெக்டர் சந்தீப்நந்தூரி தொடங்கி வைத்தார்


தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் திரையிடும் பணி கலெக்டர் சந்தீப்நந்தூரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 March 2019 3:45 AM IST (Updated: 13 March 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் திரையிடும் பணியை நேற்று கலெக்டர் சந்தீப்நந்தூரி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் திரையிடும் பணி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி கலந்து கொண்டு விழிப்புணர்வு குறும்படம் திரையிடும் பணியை தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் ஒப்புகை சீட்டு எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எந்திரத்தின் மூலம் வாக்காளர்கள் தாங்கள் அளித்த வாக்குகளை 7 வினாடிகள் பார்த்து அவர்களே உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்காளர் ஒப்புகை சீட்டு எந்திரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர்தலில் மாற்றுத்திறனாளிகளும் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குசாவடி மையங்களில் தேவையான சாய்வுதளம் வசதிகள், சக்கர நாற்காலி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைகள் வழங்கியுள்ளது. இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 11 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளார்கள். அவர்கள் எந்தவிதமான மாற்றுத்திறன் கொண்டவர்கள் என்பதையும், எந்த வாக்குசாவடி மையங்களில் வாக்களிக்க உள்ளார்கள் என்பதையும் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு வாக்குசாவடி மையங்களில் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பது குறித்தும், வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள வாக்காளர் ஒப்புகை சீட்டு எந்திரம் குறித்தும் விழிப்புணர்வு குறும்படங்கள் மாவட்டம் முழுவதும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குறும்படம் மூலம் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

நடைபெற உள்ள தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்திடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத்சிங் கலோன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மாநகராட்சி நிர்வாக பொறியாளர் ரூபன்சுரேஷ்பொன்னையா, தாசில்தார் ஜான்சன் தேவ சகாயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story