100 நாட்கள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காததால் பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை
100 நாட்கள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காததால் பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
ஈரோடு,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் உள்ள ஏழை தொழிலாளர்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சாலை பராமரிப்பு பணி, குளம், குட்டை தூர்வாருதல், சாலையோரம் மரக்கன்று நட்டு பராமரித்தல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஊதியம் அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்பட வேண்டும் என்பது நடைமுறை.
இந்த நிலையில் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் 100 நாட்கள் வேலை திட்டத்தின் கீழ் 15 ஊராட்சிகளில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து தொழிலாளர்கள் பல முறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து 100 நாட்கள் திட்ட பணியாளர்கள் சங்க தலைவர் சுந்தரம் தலைமையில் ஏராளமானோர் ஒன்று திரண்டு பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே பவானிசாகர் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பூபதி மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தொழிலாளர்களிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘100 நாட்கள் வேலை திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகையை உயர் அதிகாரிகளிடம் கேட்டு உள்ளதாகவும், எனவே அது கிடைத்தவுடன் ஒரு வார காலத்தில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ எனவும் தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த தொழிலாளர்கள் தங்களுடைய முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.
இதேபோல் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ஏராளமான தொழிலாளர்கள் சென்று நிலுவை சம்பளம் வழங்கக்கோரி அங்குள்ள அதிகாரி ஒருவரிடம் மனு அளித்தனர்.
Related Tags :
Next Story