பாப்ஸ்கோ ஊழியர்கள் பணிக்கு வராததால் கியாஸ் சிலிண்டர்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
பாப்ஸ்கோ ஊழியர்கள் பணிக்கு வராததால் கியாஸ் சிலிண்டர்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
புதுவை தட்டாஞ்சாவடியில் பாப்ஸ்கோ கியாஸ் முன்பதிவு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசின் இலவச திட்டத்தில் கியாஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டு சிலிண்டர்கள் சப்ளை செய்யப்படுகிறது.
இந்த பணியில் ஈடுபட்டு வரும் பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத நிலை உள்ளது. இதனால் அவர்கள் அவ்வப்போது வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் நேற்று காலை கியாஸ் சிலிண்டர்கள் பெறுவதற்காக ஏராளமான பொதுமக்கள் காலி சிலிண்டர்களுடன் அங்கு வந்திருந்தனர். ஆனால் கியாஸ் பதிவு செய்யும் ஊழியர்கள் யாரும் வேலை நிறுத்தம் காரணமாக வரவில்லை. சற்று நேரம் பொறுத்து பார்த்த பொதுமக்கள் காலி சிலிண்டர்களுடன் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து வந்த கோரிமேடு போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்வோம் என்று எச்சரித்தனர். இதனால் சாலைமறியலை கைவிட்ட பொதுமக்கள் பாப்ஸ்கோ தலைமை அலுவலகம் முன்பு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பாப்ஸ்கோ அதிகாரிகள் முன்பதிவுக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியாக கலைந்துசென்றனர்.
Related Tags :
Next Story