நாளை தொடங்குகிறது: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 33,372 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்


நாளை தொடங்குகிறது: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 33,372 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 13 March 2019 4:47 AM IST (Updated: 13 March 2019 4:47 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 33 ஆயிரத்து 372 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

திருவண்ணாமலை,

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 ஆயிரத்து 619 மாணவர்களும், 16 ஆயிரத்து 753 மாணவிகளும் என மொத்தம் 33 ஆயிரத்து 372 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

அதாவது திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 229 மாணவர்களும், 4 ஆயிரத்து 236 மாணவிகளும் என 8 ஆயிரத்து 465 பேர் தேர்வு எழுதுகின்றனர். செங்கம் கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 481 மாணவர்களும், 3 ஆயிரத்து 429 மாணவிகளும் என 6 ஆயிரத்து 910 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.

போளூர் கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 190 மாணவர்களும், 3 ஆயிரத்து 52 மாணவிகளும் என 6 ஆயிரத்து 242 பேர் தேர்வு எழுதுகின்றனர். ஆரணி கல்வி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 852 மாணவர்களும், 3 ஆயிரத்து 68 மாணவிகளும் என 5 ஆயிரத்து 920 பேர் தேர்வு எழுதுகின்றனர். செய்யாறு கல்வி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 867 மாணவர்கள், 2 ஆயிரத்து 968 மாணவிகள் என 5 ஆயிரத்து 835 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இந்த தேர்வு நாளை தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது. வழக்கமாக காலையில் நடைபெற்று வந்த பொதுத்தேர்வு இந்த ஆண்டு காலை மற்றும் மதியம் என இருவேளைகளில் நடைபெற உள்ளது. மொழிப்பாடத் தேர்வுகளான தமிழ் முதல் மற்றும் 2-ம் தாள், ஆங்கிலம் முதல் மற்றும் 2-ம் தாள் ஆகிய 4 தேர்வுகள் மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.45 மணி வரை நடைபெறுகிறது.

மற்ற பாடங்களான கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் மற்றும் விருப்ப மொழிப்பாடம் ஆகிய தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.45 மணிவரை நடைபெற உள்ளது.

எனவே பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மற்றும் தனித்தேர்வர்கள் தேர்வுகள் நடைபெறும் நேரம் மற்றும் தேதியை நன்றாக அறிந்து கொண்டு தேர்வு மையத்திற்கு முன்கூட்டியே சென்று தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த தேர்விற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் 128 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் மாவட்டத்தில் உள்ள 504 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்விற்காக முதன்மைக் கண்காணிப்பாளராக 128 பேரும், துறை அலுவலர்களாக 128 பேரும், நிலைப் படையினராக 192 பேரும், அறை கண்காணிப்பாளர்களாக 1,788 பேரும், அலுவலகப் பணியாளர்கள் 128 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 364 தேர்வு பணியில் ஈடுபட உள்ளனர்.

தேர்வு பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககம் வழங்கியுள்ள அனைத்து அறிவுரைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் எந்தவித பதற்றமும், அச்சமும் இல்லாமல் தேர்வு எழுத வேண்டும். தேர்வு அறையில் முறைகேடுகளில் எவரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த தகவலை முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story