பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்


பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 March 2019 3:30 AM IST (Updated: 13 March 2019 11:16 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து தண்டனை அளிக்க வலியுறுத்தி தனியார் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவாக பதிவு செய்து மிரட்டிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை தர வேண்டும் என்று வலியுறுத்தி மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

பின்னர் அவர்கள் மதுரவாயல் மேம்பாலம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள் மதுரவாயல்-கோயம்பேடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மதுரவாயல் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு சாலையோரம் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அடையாறில் போராட்டம்

இதே போல், நேற்று காலை அடையாறு திரு.வி.க. பாலம் அருகே உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி மாணவிகள் திரண்டு வந்து குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவும் வலியுறுத்தி கல்லூரியை ஒட்டிய சாலையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவலறிந்து வந்த போலீசார், மாணவிகளை அப்புறப்படுத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவிகளின் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story