திண்டுக்கல்லில், வீட்டின் மீது வெடிகுண்டு வீசி தம்பதியை வெட்டிக்கொன்ற 11 வாலிபர்கள் கைது -கத்தி, கோடரி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்


திண்டுக்கல்லில், வீட்டின் மீது வெடிகுண்டு வீசி தம்பதியை வெட்டிக்கொன்ற 11 வாலிபர்கள் கைது -கத்தி, கோடரி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 14 March 2019 4:15 AM IST (Updated: 14 March 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், வீட்டின் மீது வெடிகுண்டு வீசி தம்பதியை கொன்ற 11 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

குள்ளனம்பட்டி,

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியை சேர்ந்தவர் திருப்பூர் பாண்டி (வயது 43). இவருடைய மனைவி பஞ்சவர்ணம் (40). இவர்களுக்கு சந்திரசேகர், அசோக்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி காலையில் திண்டுக் கல்லை அடுத்த நல்லாம்பட்டி நெசவாளர் காலனியில் உள்ள உறவினர் வீட்டில் திருப்பூர் பாண்டி, பஞ்சவர்ணம் ஆகியோர் தங்கியிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது.

சத்தம் கேட்டு வீட்டைவிட்டு வெளியே வந்த பஞ்சவர்ணத்தை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த கும்பல் மனைவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த திருப்பூர் பாண்டியையும் வெட்டிச்சாய்த்துவிட்டு தப்பிச்சென்றது. பின்னர் தாலுகா போலீசில் அசோக்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தம்பதியை வெட்டி படுகொலை செய்த கும்பலை பிடிக்க தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் திண்டுக்கல், மதுரை, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த நிலையில், சிறுமலை அடிவாரம் பகுதியில் பதுங்கி இருந்த கொலை குற்றவாளிகள் மோட்டார் சைக்கிள்கள் மூலம் தப்பிச்செல்ல இருப்பதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் திண்டுக் கல் குடைப்பாறைப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் (27), மேட்டுப்பட்டியை சேர்ந்த நந்தகுமார் (22) என்பதும், தம்பதியை வெட்டி படுகொலை செய்த கும்பலை சேர்ந்தவர் கள் என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர்களை தாலுகா போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கொலை திட்டத்தை சிவக்குமார் உள்பட 19 பேர் அரங்கேற்றியதும், அதில் 4 பேர் சிறுமலை அடிவாரம் பகுதியிலும், 5 பேர் வெள்ளோடு பிரிவு, மொட்டணம்பட்டி பகுதியிலும் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிறுமலை அடிவாரம் பகுதியில் பதுங்கி இருந்த குடைப்பாறைப்பட்டியை சேர்ந்த செல்வக்குமார் (24), மணி (24), ரெங்கநாதன் (23), விக்னேஷ் (25), வெள்ளோடு பிரிவில் பதுங்கி இருந்த சக்திவேல் (25), கோபி (25), மொட்டணம்பட்டி ரெயில்வே கேட் பகுதியில் பதுங்கி இருந்த பிரபாகரன் (24), தினேஷ் (23), நாகராஜ் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கத்தி, கோடரி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் ஒரு சரக்கு வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 8 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் பாராட்டினார்.

Next Story