கணவன்-மனைவி தற்கொலை வறுமை, முதுமை காரணமாக விபரீத முடிவு


கணவன்-மனைவி தற்கொலை வறுமை, முதுமை காரணமாக விபரீத முடிவு
x
தினத்தந்தி 14 March 2019 3:45 AM IST (Updated: 14 March 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை அருகே வறுமை, முதுமை காரணமாக கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மேல ஆரியம்பட்டியை சேர்ந்தவர் தங்கையன் (வயது 75). இவரது மனைவி சின்னம்மாள் (70). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. இதனால் திருமணமான தனது மகன் கோபாலகிருஷ்ணனுடன் தங்கையன், சின்னம்மாள் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை இவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் தங்கையன் தூக்குப்போட்ட நிலையில் இறந்து கிடந்தார். சின்னம்மாள் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்த கோபாலகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உதவியுடன் சின்னம்மாள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் தங்கையன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோபாலகிருஷ்ணன் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தங்கையன் மற்றும் சின்னம்மாளுக்கு மூச்சு இரைப்பு நோய் இருந்துள்ளது. இதற்கு சிகிச்சை செய்துகொள்ள போதிய வசதியில்லாமல் இருந்துள்ளனர். மேலும் வறுமை மற்றும் முதுமை காரணமாக தங்கள் மகனுக்கு சிரமம் கொடுக்கக்கூடாதென முடிவு செய்த இருவரும் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்துள்ளனர்.

பின்னர் தங்கையன் தூக்குப்போட்டும், சின்னம்மாள் விஷம் குடித்தும் தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது.

வறுமையின் காரணமாக கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story