பிளஸ்-2 கணக்கு பதிவியல், வேதியியல் தேர்வுகள் எளிதாக இருந்தது மாணவ-மாணவிகள் கருத்து


பிளஸ்-2 கணக்கு பதிவியல், வேதியியல் தேர்வுகள் எளிதாக இருந்தது மாணவ-மாணவிகள் கருத்து
x
தினத்தந்தி 13 March 2019 10:45 PM GMT (Updated: 13 March 2019 8:12 PM GMT)

பிளஸ்-2 கணக்கு பதிவியல், வேதியியல் தேர்வுகள் எளிதாக இருந்ததாக, அந்த தேர்வுகளை எழுதிய மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

பெரம்பலூர்,

பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வு கடந்த 1-ந்தேதி தொடங்கியது. ஒவ்வொரு தேர்வுக்கும் மாணவர்கள் தயாராகுவதற்காக இடைவெளி விடப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது. மொழி பாடத்தேர்வுகளான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம், வணிகவியல், விலங்கியல், வேளாண்மை, தையல் மற்றும் ஆடை வடிவமைப்பு நர்சிங், நுண்ணுயிரியல், இயற்பியல், பொருளியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான தேர்வு ஏற்கனவே முடிந்து விட்டது.

இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வேதியியல், கணக்கு பதிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகள் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுதுவதற்கு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு அறைக்கு வந்தனர். காலை 10.15 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வுகள் பிற்பகல் 12.45 மணிக்கு முடிந்தன.

கணக்கு பதிவியல் தேர்வு முடிந்து மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வெளியே வந்தனர். கணக்கு பதிவியல் தேர்வு குறித்து மாணவ-மாணவிகள் கூறுகையில், ‘கணக்கு பதிவியல் தேர்வு எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண், 3 மதிப்பெண், 5 மதிப்பெண் வினாக்களில் சில புத்தகத்தின் பின்புறத்தில் கேட்கப்படும் வினாக்களில் இருந்து எடுக்கப்படவில்லையென்றாலும், கணக்கு என்பதால் எளிதாக பதிலளிக்க முடிந்தது. இரண்டு, மூன்று மதிப்பெண் வினாக்களில் கட்டாயமாக விடையளிக்க வேண்டும் என்ற வினாக்கள் எளிதாக இருந்தது. இதனால் முழுமதிப்பெண் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என்றனர். அந்த மாணவிகள் கணக்கு பதிவியல் தேர்வினை நன்றாக எழுதியிருக்கிறோம் என்பதை குறிக்கும் வகையில் தனது கட்டை விரலை உயர்த்தி காண்பித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை காணமுடிந்தது.

இதே போல் வேதியியல் தேர்வு குறித்து மாணவி அருணா கூறுகையில், ‘வேதியல் தேர்வும் எளிதாக இருந்தது. 2 மதிப்பெண் வினாக்கள் மட்டும் கொஞ்சம் கடினமாக இருந்தது மற்றபடி அனைத்து வினாக்களும் பதிலளிக்கும் வகையில் இருந்தது’ என்றார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வேதியியல் தேர்வினை 3,210 மாணவர்களும், 3,306 மாணவிகளும் என மொத்தம் 6,516 பேர் எழுதினர். 118 மாணவர்கள், 73 மாணவிகள் என மொத்தம் 191 பேர் வேதியியல் தேர்வினை எழுத வரவில்லை என குறிப்பிடத்தக்கது. இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில் கணக்கு பதிவியல் தேர்வினை 516 மாணவர்களும், 620 மாணவிகளும் என மொத்தம் 1,136 பேர் எழுதினர். 69 மாணவர்கள், 48 மாணவிகள் என மொத்தம் 118 பேர் கணக்கு பதிவியல் தேர்வினை எழுத வரவில்லை என குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ்-2 தேர்வுகளில் யாரும் காப்பி அடித்ததாக பிடிபடவில்லை என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாளை (வெள்ளிக்கிழமை) பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு கணினி அறிவியல் பாடத்தேர்வு நடக்கிறது. வருகிற 19-ந்தேதியுடன் பிளஸ்-2 மாணவர்களுக்கு தேர்வு முடிவடைகிறது.

Next Story