நிலக்கோட்டை அருகே, வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி தீவிரம்
நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இதன்மூலம் 50 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியதாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நிலக்கோட்டை,
தமிழகத்தில் வைகை ஆறு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். தமிழகத்தின் முதல்- அமைச்சராக இருந்த காமராஜர் பெரியகுளம் தாலுகா ஆண்டிப்பட்டியில் உள்ள இயற்கையின் அமைப்பை உணர்ந்து வைகை அணையை உருவாக்கினார். வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வைகையாற்றில் பெருக்கெடுத்தும் ஓடும்.இந்த வைகையாறு நிலக்கோட்டை, மதுரை வழியாக செல்கிறது. இதையடுத்து நிலக்கோட்டை மக்களின் நலனை கருத்தில் கொண்டு அணைப்பட்டியில் பேரணை கட்டப்பட்டது. இதன்மூலம் நிலக்கோட்டையை சுற்றியுள்ள கிராமப்பகுதி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் அணைப்பட்டி பகுதியில் பேரணை அருகே தண்ணீரை தேக்கி வைக்க தடுப்பணை கட்ட வேண்டும் என பொதுமக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு தமிழக அரசு நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் நீர் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.12 கோடியே 30 லட்சத்தை ஒதுக்கி நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலின் கிழக்குப்பகுதியில் சித்தர்கள்நத்தம் கிராமத்தில் தடுப்பணை கட்ட உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து சித்தர்கள்நத்தம் கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்பட்டது. மதுரை கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், உதவிப் பொறியாளர் தளபதி ராம்குமார் ஆகியோரின் மேற்பார்வையில் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதையொட்டி 50 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியதை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த பணி முழுமை பெறும்போது நிலக்கோட்டை ஒன்றியத்தில் கோடை காலத்திலும் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இருக்காது என கருதப்படுகிறது.
Related Tags :
Next Story