திருப்பூர், உடுமலையில், கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் - பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து நடந்தது


திருப்பூர், உடுமலையில், கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் - பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து நடந்தது
x
தினத்தந்தி 14 March 2019 4:00 AM IST (Updated: 14 March 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், அந்த சம்பவத்தை கண்டித்தும் திருப்பூர் மற்றும் உடுமலையில் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து அவர்களை துன்புறுத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஏராளமான பெண்களும், கல்லூரி மாணவிகளும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தினமும் புதிய, புதிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவத்தை கண்டித்தும், அதில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் கல்லூரி மாணவ-மாணவிகளும் வகுப்புகளை புறக் கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ளது.

இந்த நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்தும், இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உடுமலையில் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு, கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து சிறிது நேரம் போராட்டம் நடத்தினர்.

பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரிக்கு வழக்கம் போல் நேற்று காலை 8.30 மணிக்கு மாணவ-மாணவிகள் வந்தனர். பின்னர் அவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல், வகுப்புகளை புறக்கணித்து விட்டு, பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி, கல்லூரியின் நுழைவு வாயில் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவ-மாணவிகளின் திடீர் போராட்டத்தை அறிந்த கல்லூரி முதல்வர் ராமையா, போராட்டம் நடத்திய மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவ-மாணவிகள் யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. அனைவரும் வகுப்புகளுக்குள் செல்லுங்கள் என்றார். அதன்பின்னர் மாணவ-மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் சென்று தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், தொடர்புடைய குற்றவாளிகளை தப்ப விடக்கூடாது என்று கோஷமிட்டனர். இந்த தர்ணா போராட்டம் காலை 9 மணிவரை நடந்தது. அதன்பின்னர் மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.

Next Story