நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் ஜெகதீஷ் ஷெட்டர் சொல்கிறார்


நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் ஜெகதீஷ் ஷெட்டர் சொல்கிறார்
x
தினத்தந்தி 14 March 2019 4:25 AM IST (Updated: 14 March 2019 4:25 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்று ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

பல்லாரி, 

முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பல்லாரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரஸ் வாபஸ் பெறும்

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு குமாரசாமி ராஜினாமா செய்வார் அல்லது கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெறும். தேர்தலுக்கு பிறகு கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும்.

இந்த கூட்டணி ஒரு கட்டாய திருமணத்தை போன்றது. இந்த கட்டாய திருமணத்தால் வீட்டில் தினமும் தகராறு ஏற்படுகிறது. இரு கட்சிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. அதனால் வளர்ச்சி பணிகள் முடங்கிவிட்டன.

மோடி மீண்டும் பிரதமர்

இந்த கூட்டணி அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அரசின் மோசமான செயல்பாடுகளால் மக்கள் வெறுப்பில் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். மோடி கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான முறையில் ஆட்சி நிர்வாகத்தை நடத்தி இருக்கிறார்.

மோடி மீது மக்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள். அதனால் மோடி மீண்டும் பிரதமராவது உறுதி. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தீவிரமான முறையில் தேர்தல் பணியாற்றும். மோடி கர்நாடகத்தில் இன்னும் சில இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வார்.

இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

Next Story