விஜயாப்புராவில் புரட்சி திருமணம் மணமகனுக்கு தாலிகட்டினார், மணமகள் சமூகசீர்திருத்தவாதி பசவண்ணரின் போதனைபடி நடந்தது


விஜயாப்புராவில் புரட்சி திருமணம் மணமகனுக்கு தாலிகட்டினார், மணமகள் சமூகசீர்திருத்தவாதி பசவண்ணரின் போதனைபடி நடந்தது
x
தினத்தந்தி 14 March 2019 4:31 AM IST (Updated: 14 March 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

சமூகசீர்திருத்தவாதி பசவண்ணரின் போதனைபடி மணமகன்களின் கழுத்தில் புதுமைப்பெண்கள் தாலி கட்டிய வினோத திருமணம் விஜயாப்புராவில் நடந்தது.

பெங்களூரு,

நமது கலாசாரத்தில் திருமணத்தின் போது மணப்பெண்ணின் கழுத்தில் மணமகன் தாலிகட்டுவது வழக்கம். இதனை நாம் பண்டைய காலம் தொட்டு பாரம்பரியமாக கடைப்பிடித்து வருகிறோம்.

ஆனால், கர்நாடகத்தில் மணமகள்கள், மணமகன்கள் கழுத்தில் தாலி கட்டிய புரட்சி திருமணம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

தாலிகட்டிய மணமகள்கள்

விஜயாப்புரா மாவட்டம் முத்தேபிகால் தாலுகாவில் நலதவாட் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஹல்லூர் மண்டபம் உள்ளது. இங்கு சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது. அதன்படி அமித்-பிரியா, பிரபுராஜ்-அங்கீதா ஆகியே ஜோடிகளுக்கு சாதி மறுப்பு திருமணம் நடந்தது. மணமகன்களான அமித், பிரபுராஜ் ஆகியோர் ஹாலுமட் சாதியையும், மணமகள்களான பிரியா, அங்கீதா ஆகியோர் பானஜிகா சாதியையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்த திருமணத்தின்போது மணமகள் பிரியா, அமித்தின் கழுத்திலும், அங்கீதா, பிரபுராஜ் கழுத்திலும் தாலி கட்டினர். இதேபோல் அமித், பிரபுராஜ் ஆகியோர் முறைகே தங்களுக்கான மணமகள்களான பிரியா, அங்கீதா ஆகியோரின் கழுத்துகளில் தாலி கட்டினர். இந்த திருமணத்தின்போது அட்சதையாக பூ இதழ்கள் தூவப்பட்டன.

பசவண்ணரின் கொள்கைப்படி...

இந்த திருமணம் 12-ம் நூற்றாண்டின் சமூக சீர்த்திருத்தவாதி பசவண்ணரின் போதனை படி நடந்தது. அதாவது ஆணும், பெண்ணும் சமம் என்று அவர் கூறியதை நிரூபிக்கும் வகையில் மணமகள்களும், மணமகன்களின் கழுத்துகளில் தாலி கட்டினர். இந்த தாலியில் ருத்ராட்சை இடம்பெற்றிருந்தது.

இந்த திருமணத்துக்காக முகூர்த்த நேரம் எதுவும் குறிக்கப்படவில்லை. திருமணத்தில் இலகல் குருமகாந்தேஷ் சுவாமி, லிங்கசூகூர் விஜய் மகாந்தேஷ் மடத்தின் சித்தங்கலிங்க சுவாமி, கூலிதாகுட்டா பசவராஜ் சாமி, மகாந்த் தீர்த்த சுவாமி, சாதி மடத்தின் பசவலிங்க சுவாமி, மதரா சென்னைய்யா குரு பீடத்தின் பசவமூர்த்தி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். திருமணத்தில் வந்து வாழ்த்தியவர்களுக்கு பசவண்ணரின் கொள்கைகள் அடங்கிய புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

ஆணும், பெண்ணும் சமம்

இதுகுறித்து, இலகல் குருமகாந்தேஷ் சுவாமி கூறுகையில், ‘ஆணும், பெண்ணும் சமம் என்பதை நிரூபிக்கும் வகையில் மணமகன்களும், மணமகள்களும் ஒருவருக்கொருவர் தாலி கட்டி கொண்டனர். மூடநம்பிக்கையை ஒழிக்கவும் இந்த திருமணம் ஒரு நிலையாகும்’ என்றார்.

பசவமூர்த்தி கூறுகையில், ‘சாதி, மதங்களை பார்த்து திருமணம் செய்பவர்கள் இந்த திருமணத்தை பார்த்து திருந்த வேண்டும்’ என்றார்.

Next Story