பொள்ளாச்சி பாலியல் விவகாரம், சட்டக்கல்லூரி மாணவர்கள் கண்டன ஊர்வலம்
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கக்கோரி புதுவை சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் கண்டன ஊர்வலம் நடத்தினார்கள்.
புதுச்சேரி,
பொள்ளாச்சியில் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி ஆபாச வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவேண்டும். அவர்களுக்கு தூக்கு தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதை வலியுறுத்தி தமிழகம்-புதுவையில் சமூக அமைப்புகள், கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். புதுவை சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். வெங்கடசுப்பாரெட்டியார் சிலை அருகே அவர்கள் கூடினார்கள்.
அங்கிருந்து குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கக்கோரி சட்டசபை நோக்கி மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் வந்தவர்கள் கோரிக்கை அட்டைகளையும் கையில் ஏந்தியபடி வந்தனர்.
மறைமலையடிகள் சாலை, அண்ணாசாலை வழியாக காமராஜர் சிலையை ஊர்வலம் அடைந்தது. அங்கு கோரிக்கையை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
புதுச்சேரியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் சார்பில் பொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்பு உடையவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தி அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகார அமைப்பின் நிர்வாகி ரூபாவதி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமார், பெரியார் சிந்தனையாளர் இயக்க தீனா, மனித உரிமைகள் கழக முருகானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
Related Tags :
Next Story