நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி, சோதனை சாவடிகளில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி, சோதனை சாவடிகளில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 14 March 2019 4:45 AM IST (Updated: 14 March 2019 4:41 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலியாக சோதனை சாவடிகளில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா ஆய்வு செய்தார்.

பாகூர்,

புதுவையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதை தொடர்ந்து போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு மதுபானம், பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை புதுச்சேரி தெற்கு எல்லையான முள்ளோடையில் கடலூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்யவும், 24 மணி நேரமும் போலீசார் பணியில் இருக்கவும் உத்தரவிட்டார். மேலும் சோதனையின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் பணமோ அல்லது மதுபாட்டில்களோ சிக்கினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து சோரியாங்குப்பம், தவளக்குப்பம் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளுக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தெற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரஹீம், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் வடிவழகன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

நேற்று காலை கோரிமேடு எல்லையில் வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு வரும் வாகனங்களை மறித்து சோதனை நடத்தினர். அதில் இருக்கும் பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். இதேபோல் புதுவையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதாவது கொண்டு செல்லப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர்.

Next Story