நடுக்கடலில் இருந்து நீந்தி தனுஷ்கோடியில் கரை சேர்ந்த இலங்கை கடத்தல்காரர் கைது உடந்தையாக இருந்த ராமேசுவரம் அதிகாரி யார்? தீவிர விசாரணை


நடுக்கடலில் இருந்து நீந்தி தனுஷ்கோடியில் கரை சேர்ந்த இலங்கை கடத்தல்காரர் கைது உடந்தையாக இருந்த ராமேசுவரம் அதிகாரி யார்? தீவிர விசாரணை
x
தினத்தந்தி 13 March 2019 9:45 PM GMT (Updated: 13 March 2019 11:12 PM GMT)

நடுக்கடலில் இருந்து நீந்தி தனுஷ்கோடியில் கரை சேர்ந்த இலங்கையை சேர்ந்த கடத்தல்காரரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக செயல்பட்ட ராமேசுவரம் அதிகாரி யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி கம்பிபாடு கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒருவர் சுற்றித்திரிவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. அதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு குடிசையில் பதுங்கி இருந்தவரை பிடித்து விசாரித்தனர். அவர் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் அவரை தனுஷ்கோடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

அவரிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் திலகராணி ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் இலங்கை தலைமன்னாரை சேர்ந்த ஜெயசீலன் என்ற சிலாக்(வயது 52) என்பது தெரியவந்தது. கடந்த 10-ந்தேதி இலங்கையில் இருந்து ஒரு பிளாஸ்டிக் படகில் இவரும், ராஜா என்ற ராஜு என்பவரும் வந்துள்ளனர். கச்சத்தீவு அருகே நடுக்கடலில், ராமேசுவரத்தை சேர்ந்த ஒரு படகில் கொண்டு வரப்பட்ட கஞ்சா மூடைகளை இவர்கள் படகில் ஏற்றி இலங்கைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

அப்போது வழியில் இலங்கை கடற்படையினர் இவர்களது படகை விரட்டியுள்ளனர். இதையடுத்து சில மூடைகளை கடலுக்குள் வீசிவிட்டதாகவும், தான் மட்டும் கடலில் குதித்து தப்பியதாகவும் ஜெயசீலன் தெரிவித்தார்.

இதனிடையே ராஜாவையும், அவர்கள் வந்த படகையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்றதாகவும் கூறப்படுகிறது. கடலுக்குள் குதித்த ஜெயசீலன் நீந்தியே தனுஷ்கோடிக்கு வந்து கரை சேர்ந்துள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் “கடந்த 1983-ம் ஆண்டு இலங்கையில் போர் நடைபெற்ற போது அங்கிருந்து ஏராளமானவர்களை இவர் தமிழகத்திற்கு அகதியாக கொண்டு வந்து சேர்த்துள்ளதும், இவர் மீது இலங்கையில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதுதவிர தனுஷ்கோடி போலீஸ் நிலையத்திலும் இவர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் கியூ பிரிவு போலீசாரால் தேடப்படும் நபர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், தலைமன்னாரில் இருந்து இவர் அவ்வப்போது கடத்தல் பொருட்களை அனுப்பி வந்ததாகவும், அவருக்கு ராமேசுவரத்தில் உள்ள அதிகாரி ஒருவர் உடந்தையாக இருந்ததாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

அந்த அதிகாரி யார்? என்பது குறித்து தனிப்பிரிவு போலீசாரும், உளவுத்துறையினரும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் தனுஷ்கோடியில் கைப்பற்றப்பட்ட கஞ்சா மூடைகள், நடுக்கடலில் ஜெயசீலன் படகில் இருந்து தூக்கிப்போட்டதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Next Story