ஆலங்குளம், சேரன்மாதேவியில் காய்கறி வியாபாரி- டிரைவரிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்
ஆலங்குளம் மற்றும் சேரன்மாதேவியில் காய்கறி வியாபாரி, மினிலாரி டிரைவரிடம் இருந்து ரூ.2¾ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலங்குளம்,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தனிப்படை அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஆலங்குளம் அருகே சுரண்டை செல்லும் சாலையான முத்துகிருஷ்ணபேரியில் ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சுரண்டையில் இருந்து வந்த லாரியை மறித்து அதில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சுரண்டை சிவகுருநாதபுரத்தை சேர்ந்த மாடசாமி (வயது 56) என்பதும், காய்கறி வியாபாரி என்பதும் தெரியவந்தது. அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, ரூ.95 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.
அந்த பணத்தை எடுத்துக் கொண்டு நெல்லை டவுன் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கி கேரளாவுக்கு அனுப்ப செல்வதாக அவர் தெரிவித்தார். அவரிடம் ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் ரூ.95 ஆயிரத்தை பறிமுதல் செய்து, ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பணத்திற்கான உரிய ஆவணங்களை ஒப்படைத்தவுடன் பணம் மாடசாமியிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியை சேர்ந்த சங்கர்ராஜ் என்பவரிடம் இருந்து ரூ.20 லட்சமும், பாளையங்கோட்டை அந்தோணி சேவியர் என்பவரிடம் இருந்து ரூ.68 லட்சத்து 14 ஆயிரமும் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சேரன்மாதேவி- களக்காடு சாலையில் புலவன்பட்டி குடியிருப்பு பகுதியில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பிரபாகர் அருண்செல்வம் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை மறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மினி லாரி டிரைவர் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பதும், அவர் ஆவணங்கள் எதுவும் இன்றி ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story