அவதூறு கருத்து தெரிவித்ததாக வழக்கு: ஆலங்குடி எம்.எல்.ஏ.வுக்கு முன்ஜாமீன் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


அவதூறு கருத்து தெரிவித்ததாக வழக்கு: ஆலங்குடி எம்.எல்.ஏ.வுக்கு முன்ஜாமீன் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 13 March 2019 10:15 PM GMT (Updated: 13 March 2019 11:47 PM GMT)

அவதூறு கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆலங்குடி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு முன்ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மெய்யநாதன். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த மாதம் 2-ந்தேதி புதுக்கோட்டை, கொத்தமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டு இருந்த சைக்கிள்களை முன்கூட்டியே வழங்கியதாகவும், அவதூறாக கருத்து தெரிவித்ததாகவும் என் மீது கீரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் என் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

ஆனால் என் மீதான புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அளிக்கப்பட்ட புகாரில் என் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். ஆனால் என் மீது எந்த தவறும் இல்லை. எனவே கீரமங்கலம் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் தேவையற்ற கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்கலாம் என்று நீதிபதி தெரிவித்தார். பின்னர் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story