100 சதவீத வாக்குப்பதிவு அடைவதற்காக தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
100 சதவீத வாக்குப்பதிவு அடைவதற்காக தேர்தல் விழிப்புணர்வை மாவட்ட கலெக்டர் ராமன் ஏற்படுத்தினார்.
வேலூர்,
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. வாக்குப்பதிவு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வேலூர் தொரப்பாடியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தை மாவட்ட கலெக்டர் ராமன் நேற்று ஆய்வு செய்தார். அங்கு அடிப்படை வசதிகளான கழிவறை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளதா? என்று பார்வையிட்டார். தற்போது கடுமையான வெயில் இருப்பதால் வாக்காளர்கள் வசதிக்காக நிழற்பந்தல் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
மேலும், வாக்குப்பதிவு நாள் அன்று வாக்காளர்கள் எளிமையாக வாக்களிக்கவும், மாற்றுத்திறனாளர்கள், முதியவர்கள் வந்து செல்வதற்கு வசதிகள் உள்ளதா என்பது குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தொரப்பாடி எம்.ஜி.ஆர் சிலையின் அருகில் தேர்தல் பறக்கும் படையினர் கார்களை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அங்கு வந்த கலெக்டர் வாகன சோதனை பணியையும் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து 100 சதவீத வாக்குப்பதிவு அடைவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு வாகன பிரசாரத்தையும் அவர் பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தனியார் சமையல் கியாஸ் ஏஜென்சியில் நடந்த தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் அங்குள்ள சமையல் கியாஸ் சிலிண்டர்களில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அடைவதற்கான விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டினார். இதன் மூலம் கியாஸ் சிலிண்டர் வாங்கும் பொதுமக்கள் விழிப்புணர்வு அடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து வேலூர் வள்ளலாரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் ஆவின் பொருட்களிலும், ஆவின் பால் கொள்முதல் செய்ய செல்லும் லாரிகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கரை கலெக்டர் ராமன் ஒட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன், ஆவின் பொது மேலாளர் கோதண்டராமன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story